வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (23/06/2018)

கடைசி தொடர்பு:20:20 (23/06/2018)

`குற்ற வழக்கு விசாரணைக்கு ஆதார் தகவல் தரமாட்டோம்'- இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டவட்டம்!

''குற்ற வழக்கு விசாரணைக்கு ஆதாரில் சேகரிக்கப்பட்ட பையோமெட்ரிக் தகவல்கள் வழங்கப்படமாட்டாது'' என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.

ஆதார்


ஹைதராபாத்தில் நடைபெற்ற அனைத்து இந்திய கைரேகை இயக்குநர்களின்  19வது மாநாட்டில்  (All India Conference of Directors of Fingerprints Bureau) கலந்து கொண்ட தேசியக் குற்ற ஆவண காப்பகத் தலைவர் இஷ்குமார், நம் நாட்டில் ஆண்டுதோறும் 50 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகி வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் பெரும்பாலான  குற்றங்கள், முதல் குற்றவாளிகளாலே நிகழ்த்தபடுவதாக இஷ்குமார் கூறினார். எனவே  அவர்கள் விட்டுச்செல்லும்  கைரேகைகளை கண்டறியவும், அதேபோல உயிரிழந்த சடலங்களை கண்டறிவதற்கு ஏதுவாகவும் ஆதார் பயோ மெட்ரிக் தகவல்கள் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் சட்டப்பிரிவு 29ம் படி, தனி நபரிடமிருந்து சேகரிக்கப்படும் கருவிழி, பயோமெட்ரிக் உள்ளிட்ட தகவல்கள், தனி நபருக்கான ஆதாரை உருவாக்கவும், அவர்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தவுமே பயன்படுத்த வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல மற்றொரு பிரிவின்படி தேசிய பாதுகாப்பு வழக்குகளில் ஆதாரை பயன்படுத்த விதிவிலக்குகள் உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது. ஆனால், குற்ற வழக்கு விசாரணைக்கு ஆதாரில் சேகரிக்கப்பட்ட பையோமெட்ரிக் தகவல்கள் தரப்படமாட்டாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.