வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (23/06/2018)

கடைசி தொடர்பு:20:40 (23/06/2018)

தூங்கியவரை எழுப்பி கைது செய்த போலீஸ்! கொந்தளிக்கும் மீத்தேன் எதிர்ப்பாளர்கள்

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் குறித்த விழிப்பு உணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். "அரசை எதிர்த்துப் பேசினால் வழக்கு என்றால், இது மக்களுக்கான அரசா" எனக் கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

                              மீத்தேன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள குருவாலப்பர்கோவில், வீரசோழபுரம், கரைமேடு உள்ளிட்ட 6 கிராமங்களில் ஓ.என்.ஜி.சி மூலம் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணிகள் தொடங்கத் தயார் நிலையில் உள்ளது. இத்திட்டம் விவசாயத்தைப் பாதிப்பதோடு விளைநிலம் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் வகையில் உள்ளதால், இதனைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் விவசாயிகள் உள்ளடக்கிய வகையில் போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

                                        

இப்போராட்டக்குழுவினர் இவ்வகையான திட்டங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 6ம் தேதி முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் செய்வது என அறிவித்தனர். இது குறித்து போராட்டக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் காந்தி நகரைச் சேர்ந்த கதிரவன் என்பவர் மக்கள் அதிகாரம் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று மாலை ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியிருக்கிறார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கதிரவனை போலீஸார் கைது செய்தனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களை போராட்டத்துக்குத் தூண்டுவதாக கதிரவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கைது மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                                 மீத்தேன் எதிர்ப்பாளர்கள்

போராட்டக்காரர்கள் சிலரிடம் பேசினோம். ”எங்கள் பகுதியில் ஆறு இடங்களில் மீத்தேன் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களே பலவித போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மீத்தேனை இப்பகுதியிலிருந்து எடுத்தால் சுற்றுச்சூழல் என்னவாகும் என்றும் தங்களது உயிரே போனாலும் மீத்தேன் எடுக்கவிடக்கூடாது என்றும் அடங்கிய பிரசுரங்களை மட்டும் வழங்கினோம். இது தவறா? இந்த அரசை எதிர்த்துப் பேசினால் அவர்கள் மீது வழக்கு போடுவது ஒன்றும் புதிதல்ல. பல தலைவர்கள் மீது வழக்குப்போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது இந்த அரசு. அரசோடு நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? சீப் ஒழித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறார்கள்போல. நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். இந்த வழக்கை எப்படிப் பார்க்கவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். இப்பகுதியில் ஒருபோது மீத்தேன் எடுக்கவிடமாட்டோம்" என்று முடித்துக்கொண்டனர்.