வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (23/06/2018)

கடைசி தொடர்பு:19:09 (23/06/2018)

ஃபேஸ்புக் மூலம் நட்பு - கல்லூரி மாணவரிடம் நகையைப் பறிகொடுத்த சென்னைச் சிறுமி

ஃபேஸ்புக்

அரும்பாக்கத்தில் ஃபேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகிய கல்லூரி மாணவர் ஒருவர் அந்தச் சிறுமியை ஏமாற்றி 15 சவரன் நகைகளைப் பறித்துள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சென்னைச் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் ஃபேஸ்புக் மூலம் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராகுலிடம் பழகியுள்ளார். ராகுல், கல்லூரி மாணவர். இந்த நட்பில், சிறுமியிடமிருந்து ராகுல், கொஞ்சம், கொஞ்சமாக தங்க நகைகளை வாங்கியுள்ளார். அவரும் ராகுல் கேட்டபோதெல்லாம் கொடுத்துள்ளார். 
சிறுமியின் வீட்டில் நகைகள் மாயமானதைக் கண்டுபிடித்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது அவர் உண்மையைத் தெரிவித்தார். இதையடுத்து ராகுலிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்தனர். ஆனால், அவர் சரிவர பதிலளிக்கவில்லை. இதையடுத்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``சிறுமியின் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவருகிறோம். 15 சவரன் நகைகளை ராகுலிடம் கொடுத்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. ராகுலிடம் விசாரித்த போது அவர், வாங்கவில்லை என்று கூறுகிறார். இதனால்தான் ராகுல்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.