நெல்லை அருகே கள்ள நோட்டு கும்பல் கைது! - 1.73 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

நெல்லையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயற்சி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெல்லையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயற்சி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலி நோட்டுகள்

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுக்களை பிடிபட்டன. 1.18 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்களையும் அவற்றை தயாரித்த கும்பலைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் கைது செய்தார்கள். அந்தக் கும்பலிடம் விசாரணை நடத்தியதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கள்ளநோட்டுக் கும்பல் கைவரிசை காட்டிவரக்கூடிய தகவல் தெரிய வந்தது. 

அதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ள நோட்டு கும்பலைப் பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு கும்பல், நல்ல நோட்டுக்களை பெற்றுக் கொண்டு இரு மடங்கு கள்ள நோட்டுக்களை கொடுத்து வரும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து சங்கரன்கோவில் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் இன்று கள்ள நோட்டுக் கும்பல் பணத்தை மாற்றப் போகும் தகவல் கிடைத்ததால், அந்த லாட்ஜில் போலீஸார் மஃப்டியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். மாலை நேரத்தில் ஒரு ஆம்னி வேனில் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் அறைக்குள் சென்றதும் போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். 

பிடிபட்டவர்கள், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், சண்முகம், சங்கர் கணேஷ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.1.73 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்களும் ஆம்னி வேனும் கைப்பற்றப்பட்டன. மூவரும் அந்த லாட்ஜில் தங்கியிருந்த அசன் என்பவருக்கு பணத்தைக் கொடுக்க வந்த விவரம் தெரியவந்தது. காவல்துறையினர் குறித்த விவரம் தெரிந்ததும் அசன் தப்பியோடி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சங்கரன்கோவில் பகுதியில் எங்கெல்லாம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு இருக்கிறது என்பது குறித்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!