எப்போது கிடைக்கும் தீர்வு? கண்ணீரில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக, அந்தத் தொகுதி எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டுமென்று சி.ஐ.டி.யூ கோரிக்கை விடுத்துள்ளது.

வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு தொடர்பாக, அந்தத் தொகுதி எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டுமென்று சி.ஐ.டி.யூ கோரிக்கை விடுத்துள்ளது.

வால்பறை

கோவை மாவட்டம் வால்பாறையின் தட்வெப்ப சூழ்நிலை இதமாக இருக்கும். ஆனால், அந்த ஊர் மக்களின் பிரச்னைகளுக்கு இன்னமும்  தீர்வு கிடைத்தபாடில்லை. வால்பாறையில் சுமார் 70 தேயிலை நிறுவனங்கள் உள்ளன. இதில், சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடுங் குளிர்.. வன விலங்குகள் நடமாட்டம் இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே வேலை செய்தும், அதற்கான கூலியை பெற முடியாமல் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சி.ஐ.டி.யூ வால்பாறை பகுதி செயலாளர் பரமசிவம் கூறுகையில், "கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, நான் வெற்றி பெற்றால், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் கூலியை ரூ.350 ஆக உயர்த்த முயற்சி செய்வேன் என அ.தி.மு.க-வின் கஸ்தூரி வாசு கூறியிருந்தார். அவர் எம்.எல்.ஏ ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கூலி உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை கை கொடுக்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிடினும், கூலி சற்று உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.290 கூலியாக பெற்று வருகிறோம்.

சில தொழில் சங்கங்கள் இந்த கூலி உயர்வில் கையெழுத்து போட்டுவிட்டனர். கூலி உயர்வு தொடர்பான போராட்டத்தில் எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, எம்.பி. மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கூலியை ரூ.350 ஆக உயர்த்தாவிடின், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கஸ்தூரி வாசு கூறியிருந்தார். கேரளாவில் வழங்கப்படுவதை போலவே, எங்களுக்கும் கூலியை உயர்த்த வேண்டும். அதேபோல, வால்பாறையில் சுற்றுலா தளமாக அறிவித்து, அவற்றை மேம்படுத்துவதாக சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே, எம்.எல்.ஏ கஸ்தூரி இதுதொடர்பாக சட்டசபையில் குரல் கொடுத்து, எங்களது பிரச்னைகளை தீர்க்க வேண்டும்" என்றார்.

இதுதொடர்பாக வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ கஸ்தூரியை தொடர்பு கொண்டபோது, "கடந்த ஆண்டு வரை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ரூ.240 கூலியாக பெற்றுவந்தனர். சில தொழிற்சங்கங்கள் கையெழுத்து போட்டுவிட்டதால், எதிர்பார்த்த கூலி உயர்வு கிடைக்கவில்லை. அதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாகவும், வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகைக்காக, திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!