`லீவ் எடுத்த ஆசிரியர்.. தகாத வார்த்தைகளில் பேசும் தலைமை ஆசிரியர்!’.. கோவையை அதிரவைத்த ஆடியோ | Coimbatore: School HM Scolding Teacher over leave issue

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (23/06/2018)

கடைசி தொடர்பு:23:30 (23/06/2018)

`லீவ் எடுத்த ஆசிரியர்.. தகாத வார்த்தைகளில் பேசும் தலைமை ஆசிரியர்!’.. கோவையை அதிரவைத்த ஆடியோ

கோவையில், பள்ளி ஆசிரியர் ஒருவர், தலைமை ஆசிரியரிடம் முன் அறிவிப்பு இல்லாமல், விடுப்பு எடுத்ததால், அவரை தலைமை ஆசிரியர் தகாத வார்தைகளில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் பள்ளி ஆசிரியர் ஒருவர், தலைமை ஆசிரியரின் முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததால், அவரைத் தலைமை ஆசிரியர் தகாத வார்தைகளில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்னை மெட்ரிகுலேசன் பள்ளி

கோவை செளரிபாளையம் பகுதியில் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது.  இந்தப் பள்ளியின் ஆசிரியரும், கேன்டீன் பொறுப்பாளருமான லீமா, கடந்த சில நாள்களுக்கு முன்பு தலைமையாசிரியரின் அனுமதியின்றி விடுமுறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தலைமை ஆசிரியரின் கணவரிடம் (தாளாளர்) விடுமுறை கேட்டு விடுப்பு எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் தலைமை ஆசிரியர் மெர்ஸி, விடுமுறை எடுத்த ஆசிரியருக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததுடன் கடுஞ்சொற்களில் பேசியுள்ளார்.

அந்த ஆடியோவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசுவதற்கு முன்பு அவரது கணவர், "நூறு முறை `I am Sorry’ என்று தலைமை ஆசிரியருக்கு மெசேஜ் அனுப்புங்கள் என கூறுகிறார். பின்னர் கணவரிடமிருந்து போனை வாங்கி பேசும் தலைமை ஆசிரியர், "என்னிடம் கேட்காமல், நீ எப்படி விடுமுறை எடுக்கலாம்?. இத்தனை நாள்கள் நீ  கேன்டீனில் என்ன செய்தாய் என்பதை மாணவர்களிடம் சொல்லி கையெழுத்து வாங்குவேன். உன் குடும்பத்தை அழித்துவிடுவேன். என்னால், மன உளைச்சல் ஏற்பட்டால், நீ செத்துவிடு" என்று கூறி, நான் ஒரு மலையாளி என்றும் ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்லி, லீமாவின் கணவரையும் ஏளனமாக பேசியுள்ளார். மேலும், தி.மு.க கட்சியை சேர்ந்தவர்களையும் அவர் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் தலைமை ஆசிரியர் ஒருவரே, தகாத வார்த்தைகளில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து, தலைமை ஆசிரியர் மெர்ஸியை தொடர்பு கொண்டபோது, "லீமா என் உறவினர். அவரது கணவர்தான் கேன்டீனை நடத்தி வந்தார். கேன்டீனில் தரமான பொருள்களை விற்காமல், லாபத்திற்காக கெட்டுப்போன பொருள்களை விற்பதாக நீண்ட நாள்களாக புகார் வந்து கொண்டிருந்தது. நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. உறவினர் என்பதை பயன்படுத்தி தப்பித்துக் கொண்டே இருந்தனர். லீமாவால், பள்ளியில் வேறு சில பிரச்னைகளும் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ஆடியோ எடிட் செய்யப்பட்டிருக்கிறது. லீமா ஒருமுறை என்னை மலையாளி என்று சொல்லி திட்டியதால்தான், நான் அப்படி சொன்னேன். நான் ஒரு சைக்கார்டிக் பேஷன்ட். அன்றைய தினம் மாத்திரை போடவில்லை. அதனால், கோபத்தில் பேசிவிட்டேன். இதுதொடர்பாக, சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளோம்" என்றார்.