அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு..! விவசாயிகள் சங்கம் கண்டனம் | Farmers association condemns minister speech

வெளியிடப்பட்ட நேரம்: 03:34 (24/06/2018)

கடைசி தொடர்பு:03:34 (24/06/2018)

அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு..! விவசாயிகள் சங்கம் கண்டனம்

சில தினங்களுக்கு முன் கும்பகோணத்தில் நடைபெற்ற காவிரி நதிநீர் மீட்பு வெற்றிவிழாவில் பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு விவசாயிகளை ஏளனம் செய்ததாகச் சர்ச்சை வெடித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ’அமைச்சர் துரைக்கண்ணு ஏன் காவிரி நீரைப் பெற முனைப்புக் காட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது. 

மேட்டூர் அணைத் திறப்பு குறித்து அந்த விழாவில் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, 'மேட்டூர் அணை தண்ணீரை, நாங்கள் நினைத்த போதெல்லாம் திறப்பதற்கு அது எங்கள் வீட்டு குழாயிலா உள்ளது என கிண்டலத்தார். இவரது பேச்சு காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு சட்டப்படி தர வேண்டிய தண்ணீரைக் கொடுக்காததால் கடந்த 7 ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைநெல் சாகுபடி நடைபெறவில்லை. ஒரு சில ஆண்டுகள் சம்பாவும் கைவிடப்பட்டது. இதனால் இங்குள்ள விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கடுமையானப் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவலநிலை உருவானது.

இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவ மழை அபரிமிதமாக பெய்ந்ததால், ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாகவே, கர்நாடகாவிடமிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்துவிடும் என பெரிதும் நம்பினார்கள். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 -ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் எனவும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில்தான் அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு விவசாயிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் சாமி நாடராஜன், 'அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு காவிரி டெல்டா விவசாயிகளை ஏளனம் செய்வதுபோல் உள்ளது. அவர் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும். கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவதற்கு அவர் எந்த ஒரு முனைப்பும் காட்டாமல், பொறுப்பற்ற முறையில் இங்கு விவசாயிகளை ஏளனம் செய்வதுபோல் பேசுகிறார். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.