வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/06/2018)

கடைசி தொடர்பு:06:00 (24/06/2018)

துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் கடைபிடிக்க வேண்டியது என்ன? ராமநாதபுரத்தில் ஒத்திகை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அனைத்துக்கட்சியினரும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் எதையுமே கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். இந்த நிலையில் இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை காவாத்து மைதானத்தில் கலவரம் கட்டுப்படுத்தல் தொடர்பாகக் காவல்துறையும் வருவாய்த்துறையும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள். அதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் டி.ஐ.ஜி காமினி, மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

துப்பாக்கி சூடு ஒத்திகை

இந்த ஒத்திகையின்போது ஆயுதப்படை காவலர்கள் மைதானத்தின் ஒருபுறம் கலவரக்காரர்கள்போல ஆக்ரோசமாக கோசமிட்டவாறு இருந்தனர். பொதுச் சொத்துக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திடும் வகையில் கலவரக்காரர்களைத் தடுத்திடும் விதமாக தடுப்புகள் போடப்பட்டு தடுக்கப்பட்டிருந்தது. இது சட்டத்திற்கு புறம்பான கூட்டம் அமைதியாக கலைந்து செல்லுங்கள் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலவரக்காரர்கள் கலைந்து செல்லாமல் ஆக்ரோசமாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி நிர்வாக மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர்கள் மூலம் கலவரக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கலவரக்காரர்கள் பேச்சுவார்த்தையினை ஏற்காமல் தடுப்புகளை தகர்த்து ஆக்ரோசமாக முன்னேறுவது போல ஒத்திகை செய்யப்பட்டது.
அடுத்தக்கட்டமாக கூட்டம் கலைந்து செல்லவில்லையென்றால் தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்படும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. அதனையடுத்தும் கூட்டம் கலைந்து செல்லாமல் முன்னேறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்துவதும் கலவரக்காரர்கள் கற்களை வீசித் தாக்குவதை போலவும் ஒத்திகை செய்யப்பட்டது. அதன்பிறகு ரப்பர் குண்டு கண்ணீர் புகைக்குண்டு வீசப்படும் என ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் கூட்டம் கலையாமல் காவலர்களைத் தாக்குதல் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் கலவரக்காரர்கள் ஈடுபடுவது போல ஒத்திகை செய்யப்பட்டது.

அப்படியும் கூட்டம் கலையாமல் இருந்தால் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படும், கூட்டம்  கலையாமல் முன்னேறினால் ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்படும். அப்படியும் கூட்டம் கலையவில்லையென்றால் 3 ரவுண்டு ரப்பர் குண்டு துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படும். அப்போதும் கூட்டம் கலையாமல் தொடர் கலவரத்தில் ஈடுபட்டால் துப்பாக்கிச்சூடு மூலம் கூட்டம் கட்டுப்படுத்தப்படும் என்று அறிவிப்பு செய்துவிட்டு பிறகு 3 ரவுண்டு குண்டுகள் துப்பாக்கி சூடு மூலம் கூட்டத்தை கட்டுப்பத்துவது காயம்பட்டவர்களை முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீட்பது, இறுதியாக சம்பவம் குறித்து காவல்துறை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர்கள் விரிவான அறிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பது போன்ற ஒத்திகை பார்க்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க