வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (24/06/2018)

கடைசி தொடர்பு:07:43 (24/06/2018)

அரசாணை எரிப்பு போராட்டம்..! பசுமை வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

சேலம் டூ சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 6-ம் தேதி அரசாணை எரிப்பு போராட்டத்தை பசுமை வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சேலம் வி.பி.சி நினைவகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் குழந்தைவேல், தமிழ்நாடு காங்கிரஸ் மேற்கு தலைவர் சுஜீந்தரகுமார், பா.ம.க நிர்வாகி சதாசிவம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், மாநிலக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ஐயாதுரை, சி.பி.எம் மாவட்டச் செயலாளர் மோகனசுந்தரம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

சேலம் டூ சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு நில அளவீட்டு பணியைச் செய்து வருகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் மற்றும் பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் 22.6.2016 சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பசுமை வழிச் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகை மற்றும் மாற்றிடம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரின் பேட்டியில் கூறிய செய்திகள் முற்றிலும் தவறானவை. விவசாய நிலங்களை கொடுக்க எந்த விவசாயும் விரும்பவில்லை. மேலும் நிலம் கையகப்படுத்தும்போது காவல்துறையினரின் துணையோடு அராஜகமாக நிலங்களை அளவீடு செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து வருகின்றனர். எனவே இந்தத் திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வரும் ஜூன் 26-ம் தேதி நில அளவீடு செய்யும் இடத்தில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைப்பெறும்.

அதை தொடர்ந்து ஜூலை 6-ம் தேதி பசுமை வழி சாலைக் குறித்த அரசாணை எரிப்பு போராட்டம் நடத்திட பசுமை வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் சேலத்தில் அறிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க