வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (24/06/2018)

கடைசி தொடர்பு:08:17 (24/06/2018)

``தமிழகத்தில் பட்டம் படித்த பெண்கள் அதிகமானதற்குக் காரணம் இதுதான்'' - பொள்ளாச்சி ஜெயராமன்!

பொள்ளாச்சி ஜெயராமன்

அ.தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கான திருமண உதவித்தொகை அதிகரிக்கப்பட்டதனாலேயே தமிழகத்தில் பட்டதாரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கோவையில், பொள்ளாச்சி ஜெயராமன்  தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய  சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்,  ``கடந்த 2016-ம் ஆண்டு வரை பட்டதாரி பெண்களுக்குத் திருமண உதவியாக 4 கிராம் தங்கம் மற்றும்  25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது. அப்போது குறைந்த அளவிலேயே பட்டம் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை இருந்தது. 2016-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு பட்டதாரி பெண்களின் திருமணத்திற்குத்  தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அறிவித்ததின் மூலம் படிப்படியாக பெண்கள் கல்வியில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார்கள்.

அ.தி.மு.க அரசின் இந்த அறிவிப்பால் பெண்கள் மத்தியில் பட்டம் பெறுவதற்கான விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது. பட்டம் பெற்றால் திருமணத்திகு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்று பெருமளவு பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. திருமண உதவித் தொகை பெறும் 2216 பயனாளிகளில் 1446 பேர் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த பெண்கள்" என அவர் தெரிவித்தார்.