`டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர எனக்கு அழைப்பு வந்திருக்கிறது' - சரிதா நாயர்!

டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்சியில் சேர தனக்கு அழைப்பு வந்ததாகவும், இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

சரிதா நாயர்

கேரள மாநிலத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கு மூலம் புகழ் பெற்றவர் சரிதா நாயர். உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி ஏற்பட சரிதா நாயரின் தொடர்பும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் தமிழக முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க. கட்சி குமரி மாவட்ட செயலாளருமான பச்சைமாலையை சரிதா நாயர் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தார். அந்தப் புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வைரலானது. இந்தச் சந்திப்பு குறித்து பச்சைமால் கூறுகையில், "களியக்காவிளையை சேர்ந்த உதயகுமாருடன் நாகர்கோவில் வழியாகச் செல்லும்போது சரிதா நாயர் எனது வீட்டுக்கு வந்தார். அவர் கட்சியில் சேருவது குறித்து எதுவும் பேசவில்லை. அப்படிச் சேருவதாக இருந்தால் அதுகுறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். இது சாதாரண சந்திப்புதான்" என்றார்.

சரிதா நாயர்

இந்த நிலையில் மலையாள மீடியாக்களிடம் பேசிய சரிதா நாயர், "தமிழகத்தில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணையும்படி தனக்கு அழைப்பு வந்தது. ஆனால் கட்சியில் சேருவது குறித்து நான் இதுவரை முடிவு எடுக்கவில்லை. உதயகுமாரை எனக்கு முன்பே தெரியும். அவர்தான் பச்சைமாலை சந்திக்க அழைத்துச்சென்றார். அ.ம.மு.க. கட்சியில் சேரும்படி எனக்கு ஏன் அழைப்பு வந்தது எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசியல் குறித்து எனக்குத் தெரியவில்லை. இதுபற்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. தீர ஆலோசித்துத்தான் முடிவு எடுக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!