`மோடி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்!' - திருப்பூர் விழாவில் ஆவேசமடைந்த பா.ஜ.க எம்.பி

மத்திய பாரதிய ஜனதா அரசின் 4 ஆண்டுக் கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று மாலை திருப்பூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பூனம் மகாஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பூனம் மகாஜன்

விழாவில் பேசிய அவர்,  ``பெண்களை தெய்வமாகப் போற்றி வழிபடும் இந்த நாட்டில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை நாம் அளிக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதைப் பா.ஜ.க அரசு மிகத் தெளிவாக நம்புகிறது. அதனால்தான் நம்முடைய மத்திய அரசு செல்வ மகள் சேமிப்பு திட்டம், உஜ்வாலா திட்டம், இலவச வங்கிக் கணக்கு திட்டம் எனப் பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் பெண்களின் உரிமைகள் மீட்கப்படும். எனவே தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்காக நாம் அதிகம் பாடுபட வேண்டும். அடுத்தமுறை தேர்தல் முடிந்து பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன், நிச்சயமாகத் தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் மத்திய அரசில் அங்கம் வகிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட 2 திராவிட கட்சிகளும் மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் செய்யவில்லை. உதய சூரியன் என்ற கட்சி, மறைந்த சூரியனாக மாறி, ஒரு குடும்பத்தின் கட்சியாகிவிட்டது. இரட்டை இலை இரண்டு அணிகளாகப் பிரிந்துபோய் கிடக்கிறது. பல நடிகர்கள் தங்களை சூப்பர்ஸ்டாராக கூறிக்கொண்டு இன்று அரசியல் கட்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, 24 மணி நேரமும் இந்திய மக்களுக்காகவே உழைத்துக்கொண்டு இருக்கும்நம் பாரதப் பிரதமர் மோடி தான் உண்மையான சூப்பர்ஸ்டார். மக்களின் சூப்பர் ஸ்டார். தமிழர்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்ட கட்சியாக, தமிழர்களின் பெருமைக்காகவே உழைக்கும் கட்சியாக பா.ஜ.க திகழ்கிறது. தமிழர்களின் பெருமையே பா.ஜ.கவின் பெருமை" என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!