`ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்' - மு.க.ஸ்டாலின் மீதும் வழக்குப்பதிவு செய்தது போலீஸ்!

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றுமுன்தினம் நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்கம்போல ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தரப்பு கறுப்புக்கொடி காட்டியது. அந்தநேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஆளுநரின் கார்மீது கறுப்புக்கொடி வீசியதாகத் தி.மு.க-வினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் தி.மு.க-வினர் 192 பேர்  கூண்டோடு கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்கள்மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. இந்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், கைது நடவடிக்கையைக் கண்டித்து சென்னை கிண்டியில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் வகையில்மு.க.ஸ்டாலின் கையில் கறுப்புக்கொடி ஏந்தி திடீரெனப் பேரணியாகச் சென்றார். அவருடன் எம்.எல்.ஏ-க்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் உட்பட தி.மு.க-வினர் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது கிண்டி போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக அனுமதியின்றி கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் என்ற 2 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் தி.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்காக தான் ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். ஆனால் இவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!