வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (24/06/2018)

கடைசி தொடர்பு:10:51 (24/06/2018)

`மனைவியைக் கொடூரமாக கொலை செய்த ஜெயில் வார்டன்' - சந்தேகத்தால் 25 நாளிலேயே முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!

நெல்லை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஜெயில் வார்டன் அவரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தார். திருமணமான 25 நாளிலேயே இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.

பாளயங்கோட்டை சிறை

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தென்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகுரு. 28 வயதான இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் வார்டனாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை சிறையில் இருந்து மாற்றலாகி பாளையங்கோட்டை சிறைக்கு வந்துள்ளார்.

அதன் பின்னர், அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. உறவினரான வேலம்மாள் என்பவருக்கும் பாலகுருவுக்கும் இடையே கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அதன் பின்னர் கணவன், மனைவி இடையே சுமுகமான உறவு நீடித்த நிலையில், கடந்த சில தினங்களாக பாலகுருவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வேலம்மாள், வேறொரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததை பாலகுரு பார்த்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பாலகுரு திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். 

மனைவி வேலம்மாளை அழைத்து, திருச்செந்தூர் கோயிலில் இரவு தங்கிவிட்டு வரலாம் எனக் கூறி அழைத்துள்ளார். இருவரும் பாளையங்கோட்டை பொட்டல் கிராமத்தின் அருகே வந்தபோது வேலம்மாளை தலையை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

இரவு முழுவதும் மனம் வெறுத்த நிலையில் இருந்த பாலகுரு காலையில் பாளையங்கோட்டை தாலுக்கா காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி சரண் அடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று மாலை வரையிலும், தான் வார்டனாக பணியாற்றிய அதே சிறையில் கைதியாக பாலகுரு அடைக்கப்பட்ட சோகம் நடந்துள்ளது.