வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (24/06/2018)

கடைசி தொடர்பு:12:41 (24/06/2018)

`வயல்களில் கசிந்த கச்சா எண்ணெய்' - நெற்பயிர்கள் வாடியதால் விவசாயிகள் சோகம்!

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கச்சா எண்ணெய் குழாய்கள் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.


   
மயிலாடுதுறை அருகே உள்ள பாண்டூர் என்ற கிராமத்தில் 2 இடங்களிலும், பொன்னூர் கிராமத்தில் 2 இடங்களிலும் எடுக்கப்படும் எண்ணெய் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் குழாய் மூலம் குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற இடங்களில் இருந்து குழாய் மூலம் வரும் கச்சா எண்ணெய் பாண்டூர் பகுதியில் ஒன்றிணைக்கப்பட்டு அங்கிருந்து குத்தாலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வயல்வெளி மூலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. எனவே இதற்காக விளை நிலங்களில் 3 அடி ஆழம் வரை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. பாண்டூர் - பொன்னூர் சாலையில் உள்ள தனது நிலத்தில் ராஜதுரை என்பவர்  தற்போது குறுவை நெல் சாகுபடி செய்துள்ளார்.  இந்நிலையில்  நடவு செய்யப்பட்ட நிலத்தில் நேற்று கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாய்கள் உடைந்து கச்சா எண்ணெய் கசிய தொடங்கியுள்ளது.  இதனால் அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் எண்ணெய் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குழாய் மூலம் எண்ணெய் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.  ஆனாலும் அதற்குள்ளாகவே கச்சா எண்ணெய் வயலில் கசிந்ததால் அப்பகுதியில் இருந்த நெற்பயிர்கள் வாடின.

விவசாயிகள்

இதனையடுத்து குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றி 10 அடி அகலத்திற்குத் தற்காலிகமாக பாத்தி கட்டி மற்ற இடங்களுக்குக் கச்சா எண்ணெய் பரவாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதே போல் குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போதே இது போன்ற எண்ணெய் கசிவை தடுக்க எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படாததால் மீண்டும் இங்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு எண்ணெய் எடுக்கும் பணியை கைவிட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.