வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (24/06/2018)

கடைசி தொடர்பு:11:36 (25/06/2018)

`பராமரிப்பு பணிக்காக ரயில்கள் நிறுத்தம்' - சென்னை செல்ல முடியாமல் பயணிகள் அவதி!

தாம்பரம் செங்கல்பட்டு இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று பகல் முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு இடைப்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று பகல் முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்கள்

தெற்கு ரயில்வே சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் - கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் இன்று பகல் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் தடத்தில் காலை 8.25 மணிமுதல் மாலை 6.40 மணிவரை இயக்கப்படும் 16 ரயில்கள் இயக்கப்படவில்லை.

இதனால் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம், மற்றும் சென்னை செல்பவர்கள், காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். பராமரிப்பு பணிகள் பற்றி ரயில்வே துறையினர் செய்திருந்த அறிவிப்பு பெரும்பாலானோருக்கு தெரியாமல் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்திற்கு வந்து திரும்பிச் சென்றனர். பேருந்து கட்டணம் உயர்வு, நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க