`விவசாயிகள் தங்களாகவே முன்வந்து நிலங்களைக் கொடுக்கிறார்கள்!’ - முதல்வர் பழனிசாமி விளக்கம்

சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து நிலத்தை கொடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில்,''பசுமை வழிச் சாலைக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுக்கும். தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் செயல்படுத்தும். தருமபுரியில் பசுமை வழிச் சாலைக்கு நில அளவீடு செய்து முட்டுக்கல் நட்டு விட்டார்கள். சேலத்தில் 36 கி.மீட்டரில், 30 கி.மீட்டர் தூரத்துக்கு நில அளவை செய்து முட்டுக்கல் நட்டாச்சு. இன்னும் 6 கி.மீட்டர் அளந்து முட்டுக்கல் போட வேண்டும்.

நூறு விவசாயிகளில் 4,5 பேர் மட்டுமே நிலம் தர மறுக்கிறார்கள். பெரும்பான்மையான விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து நிலங்களை வழங்கி இருக்கிறார்கள். பசுமைச் சாலை மிக முக்கியமானது. நன்றாக தெரியும். கடந்த 2006ம் ஆண்டில் சேலம் வழியாக உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலை போடும் போது வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சம். தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம். எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது பாருங்கள். அதற்கு ஏற்றார்போல சாலைகள் உருவாக்கிக் கொடுப்பது அரசின் கடமை. அதற்கு மத்திய அரசு முன் வந்திருக்கிறது. மாநில அரசு உதவி செய்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர்கள், விவசாயிகளுக்கான இழப்பீடுத் தொகை கோரியபடி இழப்பீடு வழங்கப்படும். சேலத்தில் நேற்று ஆட்சியர் இழப்பீடு தொகையை பத்திரிக்கைகளிலும், ஊடகங்களில் அறிவித்து இருக்கிறார். இதுவரை விவசாயிகள் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக குறிப்பாக நேற்று கவர்னர் நாமக்கல் வரும் போது ஒதுக்கப்பட்ட இடத்தில் கருப்புகொடி காட்டி இருக்கலாம். மற்றொரு இடத்தில் கருப்புக் கொடி காட்டி சட்டம் ஒழுங்கு சீர்குலைத்ததால் அவர்கள் மீது தவிர்க்க முடியாமல் வழக்கு போடப்பட்டுள்ளது.

நல்ல திட்டத்திற்காக கவர்னர் வருகிறார். இது ஜனநாயக நாடு யார் வந்தாலும் தடை செய்ய முடியாது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஏற்கனவே ஆரம்ப காலகட்டத்திலேயே எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. வளர்ந்து வரும் காலத்தில் விமான விரிவாக்கம் அவசியம். சேலத்தில் ராணுவ உதிரி பாகத் தொழிற்சாலை அமைய இருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக 20 முறை கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்கிறோம். 1,230-க்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை தெரியப்படுத்தி இருக்கிறார்கள். நில மதிப்பு உயர்வதை விட, தி.மு.க., காங்கிரஸ் அரசாங்கத்தில் இழப்பீடு தொகை கொடுத்ததை விட அதிகமான இழப்பீடு தொகை கொடுக்கப்பட இருக்கிறது. 8 வழி சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு நிலங்கள் ஒதுக்கி பசுமை வீடு கட்டித் தரப்படும்’’என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!