வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (24/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (24/06/2018)

`ஏரி, குளக்கரைகளில் பனை விதைகள்!’ - நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் முயற்சியில் கரூர் மாவட்ட நிர்வாகம்

"ஊரக வளர்ச்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்படும் பணிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அறிவுரை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அன்பழகன்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், நாகம்பள்ளி, கொடையூர் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகம்பள்ளி ஊராட்சி, மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.13.00 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு விரைவில் மாணவர்களை புதிய கட்டிடத்திற்கு மாற்றிட ஆலோசனை வழங்கினார். அப்பள்ளியின் மற்றொரு வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரையை அகற்றிவிட்டு ரூ.1.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மற்றொரு வகுப்பறை ரூ.1.41 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீட்டினை அரசுக்கு அனுப்பிட ஆலோசனை வழங்கினார். மேலும், அப்பள்ளி மாணவ, மாணவியர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சியர் அன்பழகன்

'சர்வதேச அளவில் போட்டிகளில் வெற்றி பெறவும், பணியாற்றிடவும், ஆங்கில அறிவும் அவசியமாக உள்ளது. அதற்கேற்றவாறு ஆங்கி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாள் தோறும் நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை திட்டமிடும்போது அதை ஆங்கிலத்தில் திட்டமிட்டு பழகி படிப்படியாக பேசுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும்' என ஆலோசனை வழங்கினார். 

பின்னர் பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலை எண்.7-ல் இருந்து நாகம்பள்ளி வழியாக மலைக்கோவிலூர் - செல்லாண்டியம்மன் கோவில் வரை 6.20 கி.மீ நீளத்தில் ரூ.165.70 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்காக முதல்கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அவர், `மத்திய அரசின் விதிகளின்படி சாலைகள் தரமாக அமைக்க’ பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கொடையூரில் உள்ள சின்னாம்பட்டி குளம் தூர்வாரி நீர் செல்லும் ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைப்பது குறித்து பார்வையிட்ட அவர்,"விரைந்து பணியினை துவங்கி மழைகாலத்திற்கு முன்னதாக பணிகளை முடித்து நிலத்தடி நீர் செறிவூட்ட வழிசெய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் இயற்கையை காக்க, இங்கே உள்ள ஏரிகள், குளங்களைச் சுற்றி பனை விதைகளை விதைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.