`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்!’ - ஆளுநர் மாளிகை விளக்கம் | TN Raj bhavan clarifies over governors district vistits

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (24/06/2018)

கடைசி தொடர்பு:16:20 (24/06/2018)

`மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் ஆய்வு தொடரும்!’ - ஆளுநர் மாளிகை விளக்கம்

மக்கள் நலனுக்கான ஆளுநரின் ஆய்வு தொடரும் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர்

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றதிலிருந்து மாவட்டந்தோறும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்டவாரியாக சென்று அங்குள்ள பிரச்சனைகள் குறித்தும், திட்டப் பணிகள் குறித்தும் அந்தந்த மாவட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆளுநரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆளுநர் செல்லும் இடங்களில், அவருக்குக் கருப்புக் கொடி தி.மு.க பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆளுநரின் சுற்றுப்பயணத்திற்கு எதிராக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் மௌனம் காக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மௌனம் கலைந்துள்ளது. ஆளுநரின் சுற்றுப்பயணம் குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை

அதில் `தமிழகத்தில் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று பார்வையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி செயல்பாட்டுத்துறை தலைவர் என்ற வகையில், எந்த அதிகாரிகளுடனும் ஆளுநர் கலந்தாலோசிக்கலாம். ஆய்வு என்னும் வார்த்தையை எதிர்க் கட்சித் தலைவர் பயன்படுத்துவது மக்களைத் தவறாக வழிநடத்துவது போலாகும். நெருக்கடியான நேரங்களில் முடிவெடுப்பது ஆளுநரின் கடமை. ஒருபோதும் அதிகாரிகளுக்கு எந்தவித உத்தரவையும் ஆளுநர் பிறப்பிக்கவில்லை. அதேபோல தமிழக அரசின் செயல்பாட்டையும் விமர்சித்ததில்லை. ஐ.பி.சி. 124 பிரிவின் படி ஆளுநரை செயல்படவிடாமல் தடுப்பது உள்ளிட்ட செயல்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.  எனவே மக்கள் நலனுக்காக மாவட்டந்தோறும் நடைபெறும் ஆளுநரின் ஆய்வு தொடரும்' என அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.