`அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்!’ - ஆய்வாளர் எச்சரிக்கை

காலதாமதம் செய்தால் கீழடி தொல்லியல் சுவடுகள் அழிந்து போகும் என தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்

உலக தமிழர் பேரமைப்பு சார்பில் நேற்று மன்னார்குடியில் தமிழர் வரலாற்றுத் தொன்மை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் ’’கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழிந்து போகும் அபாயம் உள்ளதாக’’ கவலையோடு எச்சரிக்கை செய்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர் ‘’தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான அகழாய்வு கீழடியில்தான் முதல்முறையாக நடைபெற்றது. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய விரிவான அகழ்வாய்வு நடைபெற்றதில்லை. கீழடியில் 102 தொல்லியல் குழிகள் தோண்டி ஆய்வுகள் மேற்கொண்டோம். அதில் 5,000 தொல் பொருள்கள் கிடைத்தன. இதன் மூலம் பல உண்மைகள் வெளிப்பட்டுள்ளன. செங்கற்களால் ஆன கட்டடங்கள் கண்டறியப்பட்டன. அங்கு சாயத் தொழிற்சாலைகள் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தன.

தமிழர் வரலாற்றுத் தொன்மை கருத்தரங்கம்

நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால் கீழடியில் மேலும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய தொல்லியல் சுவடுகள் அழிந்து போகக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. எனவே, அங்கு அகழாய்வுப் பணிகளை உடனடியாகத் தொடங்கி தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.10 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டால் முழுமையாக தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார். இந்நிகழ்வில் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பராமரிக்காக நிரந்தர வைப்பு நிதியாக 1,65,0000 ரூபாயை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனிடம் மருத்துவர் பாரதிசெல்வன் வழங்கினார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!