வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (24/06/2018)

கடைசி தொடர்பு:22:00 (24/06/2018)

தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்க சுடுகாட்டில் உறங்கிய ஆந்திரா எம்.எல்.ஏ!

அச்சத்தின் காரணமாக சுடுகாட்டை புணரமைக்க தொழிலாளர்கள் யாரும் முன்வராததால், சுடுகாட்டில் படுத்து எம்.எல்.ஏ ஒருவர் தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கியுள்ள சம்ப்வம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திரா எம்.எல்.ஏ

ஆந்திர மாநிலம் பாலகோல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான இவரது தொகுதியில் சுடுகாடு ஒன்று உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த அந்த சுடுகாட்டைப் புனரமைக்க முடிவு செய்த அவருக்கு அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் புனரமைக்கும் பணிகளைத் தொடங்குவதில் வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டது. சுடுகாட்டில் பேய் இருப்பதாக சிலர் கூறி வந்ததையடுத்து, பயத்தின் காரணமாக  தொழிலாளர்கள் யாரும் அந்த பணியைச் செய்ய முன்வரவில்லை. தொடர்ந்து ஏற்பட்ட கால தாமத்திற்கு  தீர்வுகாண நிம்மல ராம நாயுடு எண்ணினார். அதன்படி  கட்டிலை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு முடித்துக்கொண்டு, அங்கேயே படுத்து உறங்கினார்.

இதுகுறித்து பேசிய அவர், `கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளத் தயங்கும் தொழிலாளர்களிடையே பயத்தை போக்கவே நான் சுடுகாட்டில் உறங்கினேன்;இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு இங்கேதான் உறங்குவேன். விரைவில் சுடுகாடு நவீன சுடுகாடாக மாற்றப்படும்' அவர் தெரிவித்தார். எம்.எல்.ஏ.வின் இந்த அதிரடி நடவடிக்கையடுத்து தொழிலாளர்ள் வேலைக்கு வந்துள்ளனர். மேலும் சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.