வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (24/06/2018)

`போலீஸாரின் கெடுபிடி!’ - தொழிலதிபரை ஏரிக்கரையில் இறக்கிவிட்டு மாயமான கடத்தல்காரர்கள்

நேற்று இரவு முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, விடிய, விடிய தீவிர வாகன சோதனை நடந்து வந்தது. இந்நிலையில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் விஜயரங்கன் குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெருமாள் ஏரிக்கரையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விஜயராகவனை மீட்டனர்.

பண்ருட்டியில் கடத்தப்பட்ட தொழிலதிபரை போலீஸார் மீட்டிருக்கின்றனர். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தொழிலதிபர் விஜயரங்கன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் வீதியில் வசித்து வருபவர் விஜயரங்கன்(47). காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இவர், அப்பகுதியில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ், ஹார்டுவேர் கடை என பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார். விஜயரங்கன், தனது கடையில் இருந்து வீட்டிற்கு நேற்று (23.6.2018) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், இவரது மோட்டார் சைக்கிளில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால், கீழே விழுந்த விஜயரங்கத்தை காரில் வந்த 4 மர்ம நபர்கள் தாக்கி, காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவரது சகோதரர் விஜயராகவன், பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனால், நேற்று இரவு முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு, விடிய, விடிய தீவிர வாகன சோதனை நடந்து வந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட தொழில் அதிபர் விஜயரங்கன் குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெருமாள் ஏரிக்கரையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் விஜயராகவனை மீட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு கம்பியால் தாக்கி காரில் தன்னைக் கடத்தியதாகவும், இரவு முந்திரி தோப்பில் உள்ள ஒரு வீடு, மோட்டார் கொட்டகை என இரண்டு இடங்களில் தங்க வைத்திருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், `இரவு மற்றும் காலையில் உணவு வாங்கி கொடுத்தனர். தலையில் அடிப்பட்ட காயத்திற்கு முதல் உதவி சிகிச்சை அளித்ததனர். பின்னர் பெருமாள் ஏரிக்கரையில் இறக்கி விட்டுச் சென்று விட்டனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. எதற்காக என்னை கடத்தினார்கள் என்ற விபரம் ஏதும் தெரிவில்லை’’ என விஜயரங்கன், போலீஸாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயரங்கன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பண்ருட்டி போலீசார் விஜயரங்கனை கடத்திய மர்ம நபர்கள் குறித்தும், கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வர்த்தக நகரான பண்ருட்டியில் தொழில் அதிபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.