`பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேளுங்கள்!’ - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தல்

சேலம் டூ சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக்களை கேட்கவேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பசுமை வழி சாலை

சேலம் டூ சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கூறி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கி வருவதாக தெரிவித்திருந்தார்.

சாலை

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு, மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் சென்னை - சேலம் இடையேயான 277 கி.மீ நீளம் கொண்ட பசுமை வழிச் சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்பையில் ஆய்வு நடத்தி, பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் எனவும், பொதுமக்கள் எந்த மாதிரியான பிரச்னைகளை எழுப்புகிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும் எனவும், அக்கடிதத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை தயாரித்து அதை தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!