`இப்போது நடப்பது ஆட்சியில்லை; வெறும் காட்சிதான்!’ - கலகலத்த துரைமுருகன்

`தற்போது நடப்பது ஆட்சி அல்ல. வெறும் காட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு தூரம் ஓடும் என தெரியவில்லை. ஒரு நாள் ஹார்ட் அட்டாக் மாதிரி திடீரென நின்றுவிடும்’ என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

”ஒரு கலவரம் நடக்கிறது என்றால் முதல்வர்  ஓடிவந்திருக்க வேண்டும். தூத்துக்குடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் வரவில்லை?” என  தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

துரைமுருகன்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன், ”தூத்துக்குடி மக்கள் கடந்த ஒரு மாதமாக அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கிறார்கர். முதல்வர், இதுவரை எட்டிப் பார்க்கவில்லை. ஒரு கலவரம் நடக்கிறது என்றால் முதல்வர்  ஓடி வந்திருக்க வேண்டும். அண்ணா, காமராஜர், கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒரு பிரச்னை என்றால் உடனடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால், பிரச்னையும் முடிவுக்கு வந்தது. அவர்கள்தான் முதலமைச்சர்கள். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால், எடப்பாடி அப்படி அல்ல. ஜெயலலிதா இறந்ததால் அவருக்கு அடித்த யோகத்தில் முதல்வராகிவிட்டார்.  இன்று அமைச்சர்களுக்கு எந்த திட்டத்தைப் பற்றியும் தெளிவு இல்லை. இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கமிஷன்தான்.

காவிரி தண்ணீரைப் பெற்று தருவதற்கு கருணாநிதி எதுவும் செய்யவில்லை என கூறுகிறார்கள். காவிரியைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?. அண்ணா ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தார். 1972-ம் ஆண்டு சட்டசபையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி நடுவர் மன்றம் கொண்டு வந்தார். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு தலைக்காவிரியில் இருந்து வரும் தண்ணீரில் 50 சதவீதம் 740 டி.எம்.சி., தண்ணீர் வருகிறது என கண்டுபிடித்துக் கொடுத்தார். ஆனால், அந்த 740 டி.எம்.சியைத் தான் இப்பொழுது நடுவர் மன்றம் கண்டுபிடித்து 419 டி.எம்.சி., தமிழத்திற்கும், 270 டி.எம்.சி., கர்நாடகத்திற்கு என ஒவ்வொரு பகுதிக்கும்  எவ்வளவு வழங்க வேண்டும் என பிரிக்கப்பட்டது.

நடுவர் மன்றம் அமைத்த பிறகு தீர்ப்பு வருவதற்கு அதிக நாள்கள் ஆன போதும், உச்சநீதிமன்றம் சென்று இடைக்காலத் தீர்ப்பாக 205 டி.எம்.சி., தண்ணீரைப் பெற்றுக் கொடுத்தார். அதன்பிறகு இறுதித் தீர்ப்பாக தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீர் பெற்றுக் கொடுத்தார்  கருணாநிதி. ஆனால், அதன்பிறகு வந்த அ.தி.மு.க அரசு, முறையாக வாதாடாமல் இன்று 419 டிஎம்சியில் 14 டிஎம்சியை கர்நாடகத்திற்கு திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். 404 டி.எம்.சி., மட்டுமே தமிழகத்திற்கு வருகிறது. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் 48 அணைகள் கட்டப்பட்டது. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் ஒரு அணை கூட கட்டப்படவில்லை. தற்போது நடப்பது ஆட்சி அல்ல. வெறும் காட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு தூரம் ஓடும் என தெரியவில்லை. ஒரு நாள் ஹார்ட் அட்டாக் மாதிரி திடீரென நின்றுவிடும்” என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!