டிராவில் முடிந்த ஜப்பான் செனகல் ஆட்டம்! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் தொடரும் கடும் போட்டி!

ஜப்பான், செனகல் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை  H பிரிவு போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கின்றன. 

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், தனது முதல் போட்டியில் கொலம்பியாவை வென்ற ஜப்பான் அணியும், போலாந்தை வென்ற செனகல் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்காக இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாகப் போராடின. ஜப்பான் அணி பாஸிங் கேமையும், செனகல் கவுன்ட்டர் அட்டாக்கையும் கையில் எடுத்தன. ஜப்பான் அணியின் ஒரு தவறால் 11-வது நிமிடத்தில் செனகல் அணியின் கேப்டன் சாடியோ மனே கோலடித்தார். 

செனகல்

வலது விங்கில் இருந்து வந்த கிராஸை, ஜப்பான் டிஃபண்டர்கள் ஒழுங்காக வெளியேற்றத் தவற, பந்து யூசுஃப் சபாலியிடம் விழுந்தது. அதை உடனடியாக கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார் சபாலி. அதை ஜப்பான் கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், ரீபௌண்ட் ஆன பந்து மனே மீது பட்டு கோலானது. ஆனால், உடனடியாக ஜப்பான் அணியும் பதிலடி கொடுத்தது. யூடோ நகடோமா கொடுத்த பாஸை அருமையாகக் கோலாக்கினார் டகாஷி இனூய் (1-1) அதற்கு மேல் இரு அணிகளாலும் கோலடிக்க முடியாமல் போக முதல் பாதி 1-1 என முடிவுக்கு வந்தது. 

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் இரு அணிகளும் மாறி மாறி முயற்சித்தும் கோல் ஏதும் விழவில்லை. 71-வது நிமிடத்தில் ஆட்டத்தின் சமநிலையை உடைத்தார் செனகல் வீரர் வேக். இடது விங்கில் இருந்து வந்த பாஸை, நியாங் தொட்டுவிட, அதை வலது பக்கமிருந்து பாய்ந்து வந்த டிஃபண்டர் வேக் கோலாக்கினார். மீண்டும் உடனடியாக பதில் கோல் திருப்பியது ஜப்பான். மாற்று வீரராகக் களமிறங்கிய கீசுகி ஹோண்டா ஜப்பான் அணியின் இரண்டாவது கோலை 78-வது நிமிடத்தில் அடித்தார். ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

ஜப்பான்

இந்த ட்ராவின் மூலம் செனகல், ஜப்பான் இரண்டு அணிகளும் 4 புள்ளிகளோடு முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன. இவர்களின் அடுத்த போட்டியில் டிரா செய்தாலே இந்த அணிகளால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!