வெளியிடப்பட்ட நேரம்: 23:34 (24/06/2018)

கடைசி தொடர்பு:23:34 (24/06/2018)

பட்லர் அதிரடி சதம்: த்ரில் வெற்றி மூலம் ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பட்லர் உதவியுடன் கடைசி கட்டத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.  

பட்லர்

ஆஸ்திரேலியா அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி  வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கெனவே 4 போட்டிகளை வென்று இங்கிலாந்து தொடரை கைபற்றி விட்டது. கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற ஆஸ்திரேலிய  அணியும், தொடரை 5-0 என ஒயிட் வாஷ் செய்யும் நோக்கில் இங்கிலாந்து அணியும் களம் இறங்கின.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான  தொடக்கத்தை அளித்தனர். அதிரடியாக விளையாடிய பின்ச், ஹெட் ஜோடி 6 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தது. 22 ரன்கள் எடுத்த நிலையில் பின்ச் ஆட்டமிழக்க, அடுத்துக்  களமிறங்கிய ஸ்டோனிஸ் அதே ஓவரில் டக் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணியில் ஹெட்(56), காரே(44) மற்றும் ஷார்ட்(47) தவிர மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இறுதியில் 34.4 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய  மோயின் அலி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 

கோப்பையுடன் இங்கிலாந்து அணி 


பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மோசமான தொடக்கமே  கிடைத்தது. முதல் ஓவரிலே ராய் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்களும்  சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து. ஆனாலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பட்லர், இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். பொறுப்புடன் ஆடிய பட்லர் சதம் அடித்தார், அவருக்குத்  துணையாக அடில் ரஷித் நின்று விளையாடினார். இறுதிக்  கட்டத்தில் ரஷத் -ம் ஆட்டமிழக்க, தனி ஒருவராக நின்று அணியை வெற்றிபெறச்  செய்தார் பட்லர். இறுதியில் 48.3 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இதன் மூலம் 5-0 எனத்  தொடரையும் வென்றது.