வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (25/06/2018)

கடைசி தொடர்பு:10:14 (26/06/2018)

துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என போலீஸார் கூறி வரும் நிலையில், அப்பகுதியில் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் 2-வது நாளாக நடத்திய 7 மணி நேரத் தடய சோதனையில், ஒரு வீட்டின் மாடி சுவரிலும் தரையிலும் 2 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஆய்வு

துப்பாக்கிச் சூடு தொடர்பான 5 முக்கிய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி., பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி கள ஆய்வு மேற்கொள்வதற்காகத்  தமிழக காவல் துறையின் தடய அறிவியல் துறை நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ஆகியோர் உள்ளடக்கிய 60 பேர் குழு சி.பி.சி.ஐ.டி., போலீஸார் குழு 40 பேர் என மொத்தம் 100 பேர் நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்துள்ளனர். அவர்கள் 10 தனித்தனிக் குழுக்களாக கள ஆய்வினை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் துப்பாக்கிச்  சூடு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். நேற்று 2 வது நாளாக ஸடெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு, தூத்துக்குடி - பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலை, வி.வி.டி.,சிக்னல்,  திரேஸ்புரம்  போன்ற பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவி கொண்டு சோதனை மேற்கொண்டதுடன் தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தி வருகின்றனர். 

குண்டுகள்

இதை தொடர்ந்து இரண்டாவது  நாள் துப்பாக்கி சூடு நடைபெற்ற அண்ணாநகர் பகுதியில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  அண்ணாநகர் மெயின்ரோடு மற்றும் தெருக்களிலும் கள ஆய்வு செய்தனர். அப்போது அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி சூடு அனுமதி வழங்கிய துனை வட்டாட்சியர் சந்திரனிடம் சம்பவ இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி.,  மாரிராஜா விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, மாலையில் அண்ணாநகரில் தடய சோதனை நடத்தினர்.  அதில், அண்ணாநகர் 6 -வது தெருவில் உள்ள ராமசாமி என்பவரது வீட்டின் 2-வது மாடிச் சுவரிலும், அவரது வீட்டுத் தரையிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் பதிந்து உள்ளதை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

  "இப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை, ரப்பர் குண்டு மட்டுமே வீசினோம்" என போலீஸார் கூறி வந்த  நிலையில், இப்பகுதியில் நடத்தப்பட்ட 7 மணி நேரக் கள ஆய்வில்  2 தோட்டாக்கள் பதிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க