வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (25/06/2018)

கடைசி தொடர்பு:07:06 (25/06/2018)

உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா! #POLCOL

இப்போட்டியில் தோற்கும் அணியால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற முடியாது என்பதால் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சூடு பிடித்தது.

21 -வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 'H' பிரிவில் கொலம்பியா மற்றும் போலந்து அணிகள் மோதிய ஆட்டம் கஸான் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முக்கியமான இப்போட்டியில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை எளிதாக வீழ்த்தியது.

2018 உலகக்கோப்பை கால்பந்து

தங்களது முதல் போட்டியில் தோல்வியுற்றிருந்ததால், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று புள்ளிக்கணக்கைத் தொடங்க இரு அணிகளும் கடுமையாக மோதின. மேலும், இப்போட்டியில் தோற்கும் அணியால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற முடியாது என்பதால் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சூடு பிடித்தது.

முதல்பாதியில் கொலம்பியா அட்டாக்கிங் ஆட்டத்திலும், போலந்து டிஃபன்ஸ் ஆட்டத்திலும் கவனம் செலுத்தியது. 40 -வது நிமிடத்தில் ஜேம்ஸ் ராட்ரிகஸ் அடித்த கிராஸ் ஷாட்டை, ஹெட்டர் கோல் அடித்து 1-0 என கொலம்பியா முன்னிலை பெற உதவினார் அந்த அணியின் மினா.

ஜேம்ஸ் ராட்ரிகஸ்

முதல் பாதியில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை (ஆட்டத்தின் இறுதிவரை வரை போலந்து அணி கோல் அடிக்கவில்லை). இதனால் முதல்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி தொடங்கியதிலிருந்து இரு அணிகளுமே அட்டாக்கிங் ஆட்டத்தில் வேகம் கூட்டின. இந்நிலையில், காயம் காரணமாக கடந்த உலகக்கோப்பையில் ஆடமுடியாமல் போன ரடாமல் ஃபால்காவோ (தற்போது கொலம்பிய அணியின் கேப்டன்), 70 -வது நிமிடத்தில் தனது முதல் உலகக்கோப்பை கோலை அடித்தார். 2-0 என கொலம்பியா வலுப்பெற்றதால், கொலம்பிய ரசிகர்களின் ஆரவாரம் மைதானம் எங்கும் நிரம்பியது.

கோல் அடித்த மகிழ்ச்சியில் கொலம்பிய வீரர்கள்

அடுத்த கோலுக்கு கொலம்பியா அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. 75 -வது நிமிடத்தில் அந்த அணியின் ஜுவான் குவாட்ரேடோ 3 -வது கோலை அடித்தார்.

இறுதிவரை போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று 3 புள்ளிகளைப் பெற்றது கொலம்பியா அணி. தான் ஆடிய இரு போட்டிகளிலும் தோல்வியுற்றதால், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது போலந்து அணி.

இப்பிரிவில் 4 புள்ளிகளுடன் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. 28-ம் தேதி கொலம்பியா செனகல் அணியையும், போலந்து ஜப்பான் அணியையும் எதிர்கொள்ளவிருக்கின்றன.இப்போட்டிகளின் முடிவைப் பொறுத்தே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் அணிகள் தீர்மானிக்கப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க