வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (25/06/2018)

கடைசி தொடர்பு:07:03 (25/06/2018)

``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது" காவல்துறையை எச்சரித்த தினகரன்!

தினகரன்

“எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். தீர்ப்பு எப்படி வந்தாலும், இந்த  ஆட்சி இன்னும் ஓரிரு நாள்களில் கலைவது உறுதி” என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.டி.வி தினகரன் பேசினார். 

தி.மு.க-விலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகிகள் இணையும் விழா ஈரோடு பி.பி. அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்றது . டி.டி.வி தினகரன் தலைமையில் 3 ஆயிரம் தி.மு.கவினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைவதாகக் கூறினர். ஆனால், நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் இருந்த மொத்த கூட்டத்தின் எண்ணிக்கையே அதில் பாதிகூட இல்லை.
 

தினகரன்

“இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்துக்காகத் தான், நம்முடைய கழகத் தொண்டர்களையே இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்றேன். அதற்குப் பதிலாக, அந்தந்தப் பகுதிகளில் வந்து என்னைக் கழக நிர்வாகிகள் வரவேற்றுவிட்டுச் சென்றனர். நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் தி.மு.க விலிருந்து நம்முடைய கட்சியில் இணையும் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டால் மட்டும் போதும் என நான்தான் சொன்னேன்” என நிகழ்ச்சி அரங்கில் கூட்டம் குறைவாக இருந்ததைக் கண்டு தினகரனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து பேச்சை ஆரம்பித்தார்.

தினகரன்

தொடர்ந்து பேசிய தினகரன், “சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆளும்தரப்பு மற்றும் போலீஸாரிடம் இருந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு பெரும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. நசியனூர் தொட்டிபாளையத்தில் கட்சி அலுவலகத்தை திறந்துவிட்டு அங்கிருந்து நாம் கிளம்புகையில், ஈரோடு ஏ.டி.எஸ்.பி சந்தான பாண்டியன் என்னிடம் வந்து, ‘சேலத்திலிருந்து முதலமைச்சர் வந்துகொண்டிருக்கிறார். எனவே, நீங்கள் காலம் தாழ்த்திச் செல்லுங்கள்’ என்று சொன்னார். அதுமட்டுமல்லாமல், சாலையின் குறுக்கே காவல்துறை வாகனங்களை நிறுத்திவைத்து எங்களுக்கு வழிவிட மறுத்தனர். ரவுடிகள்தான் இதுபோன்று சாலையை மறித்து மிரட்டுவார்கள். ஆனால், அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையே இப்படிச் செய்தால் என்னாவது?... இன்னும் எத்தனை நாள் இப்படி பண்ணப் போறீங்க. இந்த ஆட்சி இன்னும் 2 மாசத்துல கலைந்து போனா, ஏ.டி.எஸ்.பி சந்தான பாண்டியன் என்ன வேலையை ரிசைன் பண்ணிட்டு ஓடிடுவாரா!... அப்படி ரிசைன் பண்ணினாலும் தமிழ்நாட்டுல தானே இருக்கணும். இல்ல வெளிநாட்டுக்குப் போனாலும் தமிழ்நாட்டுக்கு வந்துதானே ஆகணும். நாங்க வர வைப்போமே!’ எனப் பேசினார்.

தொடர்ந்து பேசியவர், “போக்கிரிகள், ரவுடிகள்போல் செயல்படுவது காவல் துறைக்கு வெட்கக் கேடாக இல்லையா. போலீஸார் எங்களிடம் நடந்துகொண்டதை நாங்கள் வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். அதை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், உங்களை மக்கள் என்னவென்று நினைப்பார்கள். ஏற்கெனவே, காவல்துறை மீது மக்களுக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். அதை இன்னும் தரம் தாழ்த்திக்கொண்டு செல்கிறீர்களே. ஆட்சி வரும் போகும். ஆனால், நீங்கள் அதிகாரிகள். உங்களுடைய வேலையை நீங்கள் சரியாக செய்யவில்லை எனில், நாளைக்கு அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்ற சூழல் வரும்” என போலீஸாருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். 

அடுத்து அ.தி.முக மீதான விமர்சனத்தை தொடங்கியவர், “அரசு இயந்திரம், காவல்துறை என எல்லாத்தையும் பயன்படுத்தி, எடப்பாடி அரசு ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் எனக் கிட்டத்தட்ட 200 கோடி செலவு செய்தார்கள். இருந்தும் 48 ஆயிரம் ஓட்டுதான் வாங்க முடிந்தது. இரட்டை இலையைத் தோற்கடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சேன்னு எனக்கே வருத்தமாகத்தான் இருந்தது. கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டி அன்றைக்கு இரட்டை இலையைத் தோற்கடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் ஆளானோம். ஒருவேளை அந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடாமல் இருந்திருந்தால், உதயசூரியன் ஜெயித்திருக்கும். இவர்கள் (அ.தி.மு.கவினர்) அசிங்கப்பட்டுப் போயிருப்பார்கள். எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதி நீக்கம் சம்பந்தமான வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும். தீர்ப்பின் முடிவு எப்படி வந்தாலும், இந்த ஆட்சி நிச்சயம் முடிவுக்கு வரும். சபாநாயகர் கொடுத்த தீர்ப்புதான் செல்லும் என தீர்ப்பு வந்தால், 18 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு நமது அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் வெற்றி பெறுவார்கள். அப்போது இந்த ஆட்சிக்கு முடிவு வரும்” என்றார்.