``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்!

கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டியில் சூதாட்டக்காரர்கள் தன்னை தொடர்புகொண்டதாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல் தெரிவித்துள்ளார்.

உமர் அக்மல்

கடந்த 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியது. இதில் அடிலெய்ட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் மீண்டும் பாகிஸ்தானுடன் ஜூன் 16-ம் தேதி மோத உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் நேற்று டி.வி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். 

“கடந்த உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் இரண்டு பந்துகளை விளையாடாமல் விடுவதற்கு சூதாட்டத் தரகர்கள் எனக்கு சுமார் 1.35 கோடி ரூபாய் தருவதாக கூறினர். அது, இந்தியாவுடனான உலகக்கோப்பை போட்டி. அந்தப் போட்டியில் களமிறங்காமல் இருக்கவும் என்னிடம் கேட்டனர். ஆனால், பாகிஸ்தானுக்காக விளையாடுவதில் உறுதியாக உள்ளேன். இதுபோன்று மீண்டும் என்னை அணுக வேண்டாம் என மறுத்து விட்டேன். உலகக்கோப்பை தொடர் என்றில்லாமல், இந்தியாவுடன் நடக்கும் அனைத்துப் போட்டிகளுக்கும் இது போன்ற அழைப்புகள் வரும்” என்றார் உமர் அக்மல். 

உமர் அக்மலின் இந்தப் பேச்சு உலகக்கோப்பை தொடர்களில் நடைபெறும் சூதாட்டத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. உமர் அக்மலின் இந்தத் தொலைக்காட்சி பேட்டிக்குப் பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வரும் ஜூன் 27-ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் ஊழல் தடுப்புப் பிரிவு முன்னர் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது உமர் அக்மல் சூதாட்டத் தரகர்கள் தொடர்புகொண்டது குறித்து முன்னரே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் தெரிவிக்காதது தொடர்பான கேள்விகள் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உமர் அக்மலின் இந்தக் கருத்து கிரிக்கெட் உலகில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!