"பசுமையை அழித்துவிட்டு எப்படி பசுமை வழிச்சாலை அமைக்க முடியும்?" - தி.மு.க. கேள்வி | Dmk cadres raise questions about salem greenway project

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/06/2018)

கடைசி தொடர்பு:16:00 (25/06/2018)

"பசுமையை அழித்துவிட்டு எப்படி பசுமை வழிச்சாலை அமைக்க முடியும்?" - தி.மு.க. கேள்வி

``இந்த எட்டுவழிச் சாலையை யார் கேட்டது? மாநில அரசு முன் மொழிந்ததா? இல்லை தமிழக டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தார்களா? யாரும் கேட்காதபோது தனியார் கார்ப்பரேட் நிறுவனம், கேட்டதற்காக நம் கனிம வளங்களைக் கொள்ளையடித்துப் போவதற்காகத்தான் இந்த எட்டு வழிச்சாலையை அமைக்க இருக்கிறார்கள். தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் இறந்ததைப்போல இங்கு 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரை இழந்தாவது இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம். இந்த களப்பலியில் நானே முதல் ஆளாக நிற்கிறேன்'' என்று எட்டுவழிச் சாலைக்கு எதிராக தி.மு.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசிய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தி.மு.க மாநாடு

எட்டுவழிச் சாலை தேவையில்லை என்றும், விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்றும் தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ராஜா, சிவலிங்கம், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செல்வகணபதி, பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் ஆவேசமாகப் பேசியதுடன், கூடியிருந்த தொண்டர்களையும், விவசாயிகளையும் உணர்ச்சிவசப்படச் செய்தார்கள். இறுதியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

முதலில் மைக் பிடித்த சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜா, ``ஆளும் எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் மீது இந்த அரசுக்கு அக்கறையில்லை. திட்டங்களில் கமிஷன் பெற்று நல்லா இருந்தால் போதும் என்ற சுயநலத்தோடு செயல்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் எட்டுவழிச் சாலைத் திட்டம் அறிவித்தபோதே முதலாவதாக கண்டனம் தெரிவித்தவர் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின். இந்த எட்டுவழிச் சாலையால் வெறும் 23 கிலோ மீட்டர் மட்டுமே குறைகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஹெக்டருக்கு 20 லட்சம் ரூபாய் என்கிறார். சேலம் ஆட்சியர் ரோஹிணி, வேறு ஒரு தொகையை அறிவிக்கிறார். இவர்களின் பேச்சைக்கேட்டு மக்கள் ஏமாற வேண்டாம். விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். அதிகாரிகள் கல்லை நட்டுவிட்டுப் போகட்டும் நம்முடைய வேலை பின்னாடியே அந்தக் கல்லை பிடுங்கி அடையாளம் தெரியாமல் அழிச்சிட்டே போகணும்'' என்றார்.

போராட்டம்

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், ``எடப்பாடி பழனிசாமி பசுமை வழிச் சாலை போடுறாராம். தென்னை, பாக்கு, வாழை, கிழங்கு, பூச்செடிகள் என பசுமையை அழித்துவிட்டு எப்படி பசுமை வழிச் சாலை அமைக்க முடியும்? எடப்பாடி இந்த மண்ணின் மைந்தன் அல்ல. சேலம் மாவட்டத்துக்கு அவர் சாபக்கேடு. எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுப்பதைப் போல விமான நிலைய விரிவாக்கத்துக்கு 700 ஏக்கர் எடுக்கிறார்களாம். ஏற்கெனவே 170 ஏக்கர் எடுக்கப்பட்டிருக்கிறது. 10 நிமிடம் ஒரு விமானம் வருவதற்காக இவ்வளவு நிலம் எடுக்கப் போகிறார்களாம். எட்டுவழிச் சாலை போடுவதற்கு எடப்பாடிக்கு 2,500 கோடி ரூபாய் கமிஷன் கொடுத்துவிட்டார்கள். மத்திய அரசு நேர்மையான அரசாக இருந்தால் 356-வது சட்டப்பிரிபைப் பயன்படுத்தி இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். சேலம் கலெக்டர், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்பதற்குக்கூட தயாராக இல்லை'' என்றார்.

சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், ``தி.மு.க., விவசாயிகளுக்காக பாடுபட்ட கட்சி. விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்கு என்றுமே துணை நிற்கும் நிற்கும்'' என்றார்.

இறுதியாக மைக் பிடித்த சுப்புலட்சுமி ஜெகதீசன், ``இந்த எட்டுவழிச் சாலை தேவையில்லை. விவசாயிகளிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் உடனே நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த கண்டனக் கூட்டம் போடப்பட்டிருக்கிறது. எட்டுவழிச் சாலை என்பது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். இங்கு ஒரு சகோதரி, எங்கள் நிலத்தைக் காப்பாற்றித் தாருங்கள் என்று நம்மிடம் கேட்டிருக்கிறார். நிச்சயம் தி.மு.க., கைவிடாது. உங்கள் நிலங்களைக் காப்பாற்றித் தருவோம். விவசாயிகளுக்கான கட்சி தி.மு.க., விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு விவசாயியும் மாதந்தோறும் கரெண்ட் பில் கட்ட ரொம்ப தடுமாறுவார்கள். எங்கப்பாவும் கரெண்ட் பில் கட்ட முடியாமல் தடுமாறுவார். எங்கம்மா நகை கொடுப்பதாகச் சொல்வாங்க. ஆனால் அப்பா, கைமாத்தாக வாங்கி கட்டுவதாகச் சொல்லி கட்டுவார். கரெண்ட் பில் கட்டவில்லை என்றால், பீஸ் கட்டையை புடுங்கிட்டுப் போயிடுவாங்க. மீண்டும் கரெண்ட் பில் கட்டி கட்டையை போடுவதற்குள் பயிர்களெல்லாம் கருகிப் போயிடும். அதை உணர்ந்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை 1989-ம் ஆண்டில் கொண்டு வந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டமாக இத்திட்டத்தை அறிவித்தார்.

விவசாயிகள்

இலவச மின்சாரம் மட்டுமல்லாமல் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய 7,000 கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்தவர் கருணாநிதி. மோடி பிரதமர் ஆன பிறகு சட்டங்களையே மாற்றி விட்டார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அரசு பயன்பாட்டுக்காக நிலம் எடுக்க வேண்டி இருந்தால், ஆட்சியர் தலைமையில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அதில் 75 சதவிகிதத்துக்கு மேல் எதிர்ப்பு தெரிவித்தால், அந்தத் திட்டத்தையே கைவிட்டுவிட வேண்டும் என்று சட்டம் இருந்தது. அதையெல்லாம் மோடி இப்போது மாற்றி விட்டார். மோடி 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விவசாயத்தையே அழிக்கிறார். அதுவும் கொய்யா, வாழை, மாம்பழம், தென்னை விளையக் கூடிய வளமான பகுதியை அழிக்கிறார்கள்.

இந்த எட்டுவழிச் சாலையை இப்போது யார் கேட்டது.? தமிழகத்தின் கனிம வளங்களைக் கொள்ளையடித்துப் போவதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததைப் போன்று, இங்கு 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தாவது இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம். இந்தக் களப்பலியில் நானே முதல் ஆளாக நிற்பேன்.

போலீஸ் தடுக்கிறார்கள் என்றால், அவர்கள் யார்? அவர்களும் நம்ம ஆட்கள் தானே. நாம் பயிர் செய்து கொடுப்பதைத்தானே அவர்களும் சாப்பிடுகிறார்கள். விவசாயியை அழித்தால் உங்கள் குடும்பம் அழிந்துவிடும். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு செலவு இல்லையா? 

சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தியவர்கள், இப்போது எட்டுவழிச் சாலை அமைக்கிறார்கள். இந்தச் சாலையால் மனிதர்கள் அழிய மாட்டார்களா?

சென்னை மாநகரத்துக்கு சரக்கு வாகனங்கள் வருவதால் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது என்று புறநகர் பகுதியான மதுரவாயலில் இருந்து துறைமுகம்வரை பறக்கும் பாலம் அமைக்க திட்டமிட்டோம். ஆனால், அது பாதியில் இருக்கிறது. அதை முடிக்க வேண்டியதுதானே. விமான நிலைய விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால், ஏற்கெனவே உருக்காலைக்காக 1500 ஏக்கர் எடுத்து காலியாக இருக்கிறதே அதில் விமான நிலையத்தை விரிவாக்குங்கள். தமிழகத்தை பிரதமர் மோடி குறிவைத்து விட்டார். இங்கு நம்மை ஏற்க மாட்டார்கள். அழித்து விடாலாம் என்று நினைக்கிறார். கூடங்குளம் அணுக்கழிவை எங்கு பாதுகாப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள். அடுத்து ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், பசுமை வழிச் சாலை என்று வாழ்வாதாரங்களைத் அழிக்கத் தொடங்கியுள்ளனர்.

பசுமை வழிச் சாலை போடும் பகுதிகளில் உள்ள மலைகளில் இரும்பு, பிளாட்டினம் போன்ற கனிம தாதுக்கள் உள்ளன. அவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதற்காகவே இந்தத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள். மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிடும்வரை தி.மு.க. தொடர்ந்து போராடும்'' என்றார்.

சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தி.மு.க. தொண்டர்கள் தர்ணாவிலும் ஈடுப்பட்டார்கள். காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்து, பின்னர் விடுவித்தனர். 


டிரெண்டிங் @ விகடன்