``8 வழிச்சாலைக்காக வெட்டப்படும் மரங்களை சீனா செய்வதுபோல் செய்ய வேண்டும்!" - இயற்கை ஆர்வலர் யோசனை

``8 வழிச்சாலைக்காக வெட்டப்படும் மரங்களை சீனா செய்வதுபோல் செய்ய வேண்டும்!

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்திலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் இருக்கிறது கந்தபாளையம். இந்தக் கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்வதோடு, ஸ்ரீநம்மாழ்வார் இயற்கை அங்காடி என்ற பெயரில் இயற்கைப் பொருள்கள் விற்பனை அங்காடியை நடத்தி வருகிறார் ஓ.கே.ஆர்.ராதாகிருஷ்ணன். நம்மாழ்வார் மீது உள்ள பற்றால், 2000-ம் வருடமே இயற்கை விவசாயத்துக்கு மாறிய இவர், கடந்த இரண்டு வருடங்களாக இந்த இயற்கை உணவுப் பொருள்கள் விற்பனை அங்காடியை நடத்தி வருகிறார். இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருள்களை விற்பதும் கார்ப்பரேட் கைகளுக்குச் சென்று, `நகரமயமாகி'விட்ட சூழலில் ஒரு குக்கிராமத்தில் இயற்கைப் பொருள்கள் விற்பனை அங்காடியை நடத்தி வரும் ஓ.கே.ஆர்.ராதாகிருஷ்ணனின் முயற்சி நம்மை ஆச்சர்யத்தில் தள்ளியது. அதே ஆச்சர்யத்தோடு அவரை சந்தித்துப் பேசினோம்.


``இயற்கை ஆர்வலர் ராதாகிருஷ்ணன்நான் எம்.எஸ்சி அக்ரி படிச்சுருக்கேன். புகளூர் சர்க்கரை ஆலை, ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, சக்தி சர்க்கரை ஆலைன்னு பல சர்க்கரை ஆலையில் பணியாற்றியிருக்கேன். அதோடு, 2012-ம் வருடம் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூனில் உள்ள ஃபோர்சி கரும்பு ஆலையில் ஒரு வருஷம் வேலை பார்த்திருக்கிறேன். கடந்த 2000-ம் வருடம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் லாலாப்பேட்டை பகுதியில் இயற்கை வேளாண்மை குறித்து ஒரு கூட்டம் நடத்தினார். அதில் நானும் கலந்துகிட்டேன். அவர் அங்கே இயற்கை வேளாண்மை குறித்து வைத்த கருத்துகள் விஞ்ஞானரீதியில் சாத்தியப்படுவதாக எனக்குத் தோன்றியது. அதனால் அதுவரை செயற்கை விவசாயமே செய்து வந்த நான் எனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். நஷ்டம்தான் வந்துச்சு. விடாம முயற்சி பண்ணினேன். ஓரிரு வருடங்களில் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், விளைந்த இயற்கை உணவுப் பொருள்களை விற்பனை செய்ய முடியலை. இருந்தாலும், நம்மாழ்வாரோடு தொடர்ந்து பயணித்ததால், விடாமுயற்சியோடு இயற்கை விவசாயத்தையே செய்தேன். பல லட்சம் நஷ்டம். இருந்தாலும், `நல்ல உணவா, விஷ உணவா?'ன்னு மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தினேன். `நல்ல உணவை உற்பத்தி செய்வதே அவசியம்'ங்கிற எண்ணம்தான் முன்னால் வந்தது. 2010-க்குப் பிறகு நம்பிக்கை தரும்விதமாக எனக்கு இயற்கை விவசாயம் மாறியது. செயற்கை விவசாயம் செய்து செய்து விஷமான, மலடான நிலத்தை மாற்றவே 10 வருடங்கள் ஆச்சுன்னா, அப்படிச் செயற்கை விவசாயத்தில் விளைந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டு, நம் உடம்பு எவ்வளவு விஷமாகி இருக்கும்ன்னு நினைச்சுப் பார்த்தேன். பகீர்ன்னு இருந்துச்சு.

அதனால், இயற்கை உணவுப் பொருள்கள் குறித்து கிராமப் பகுதிகளில் விழிப்பு உணர்வு வர வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது குரு நம்மாழ்வார் பெயரில் இயற்கைப் பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடியைத் தொடங்கினேன். ஒரு வருஷம் என் கடையை யாரும் சீந்தலை. அப்புறம் மெள்ள மெள்ள கூட்டம் வர ஆரம்பிச்சுது. இந்த வழியாக வந்து போகும் வெளியூர் ஆள்கள் ரெகுலரா வந்து வாங்கிட்டு போறாங்க. ஒவ்வொருவருக்கும் இயற்கை பற்றி அறிவு தேவை.
 

இயற்கை அங்காடி

இயற்கையை அழிப்பதை அரசாங்கமே முன்னின்று செய்வதுதான் தனிமனிதனும் இயற்கையை அழிக்க முயல்வதற்கு வாய்ப்பாகிவிடுகிறது. சேலம் டு சென்னை வரை பத்தாயிரம் கோடி ரூபாய் நிதியில் 250 கிலோமீட்டர் தூரத்துக்கு 8 வழி பசுமைச்சாலையை அமைக்க அரசு முயல்கிறது. எண்ணற்ற விவசாய நிலங்களையும், பல லட்சம் மரங்களையும் காவு வாங்கி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறார்கள். அழிக்கப்படும் அத்தனை லட்சம் மரங்களை மறுபடியும் உற்பத்தி பண்ணுவது யார்? அத்தனை மரங்களையும் ஒரே நேரத்தில் இழப்பதால் நாம் இழக்கும் இயற்கை சமநிலையின்மையை எப்படி மீட்பது? உலகத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா. வாகனப் போக்குவரத்தும் அதிகமாகி, அங்கே இயற்கை சீரழிந்தது. ஆனால், குறிப்பிட்ட நாள்களில் கார்களை இயக்கத் தடை என்று பல முயற்சிகளை எடுத்து, அங்கே காற்று மாசுப்பாட்டைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். நான் பத்து வருடங்களுக்கு முன்பு சக்தி கரும்பு ஆலையில் பணியாற்றியபோது, சீனாவுக்கு செமினாருக்காகச் சென்றேன். சீனாவில் உள்ள நானிங், குளின்ங்கிற இரண்டு மாநிலங்களுக்குப் பயணித்தேன். 

அப்போது சாலை போடும்போது தொழிற்சாலை அமைக்கும்போது அங்குள்ள மரங்களை அவர்கள் வெட்டி வீழுத்துவதில்லை. அந்த மரங்களில் கிளைகளை புரூனிங் முறையில் வெட்டியபின், அந்த மரங்களை அப்படியே வேரோடு பெயர்த்து எடுத்துக்கொண்டு போய், காலியாக கிடக்கும் அரசு நிலங்களில் விருப்பப்படும் தனியார் இடங்களில் நட்டு உயிரூட்டி பராமரிக்கிறார்கள். எந்தத் திட்டத்துக்காகவும் அவர்கள் ஒரு சிறு மரத்தைக்கூட அழிப்பதில்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கண்கூடாகப் பார்த்த அந்த விஷயங்களைப் பத்தி விசாரிச்சப்ப, `இது சீனாவில் நெடுங்காலமா நடக்குது'ன்னு சொல்லி மேலும் ஆச்சர்யப்படுத்தினாங்க. சேலம் எட்டுவழி பசுமைச்சாலை திட்டத்துக்காக வெட்டப்படும் பல லட்ச மரங்களையும் இப்படிச் சீன அரசு போல் மாற்று இடங்களில் பிடுங்கி நட வேண்டும். இனி ஒவ்வொரு திட்டத்துக்காகவும் அரசும், தனியாரும் வெட்டும் எல்லா மரங்களையும் சீன அரசு போல் இப்படி வேரோடு பிடுங்கி, அவற்றை மாற்று இடங்களில் நட வேண்டும். அப்படிச் செய்தால் இயற்கை நமக்கு அரணாக இருக்கும். இல்லையென்றால் இயற்கையே நமக்கு எமனாக மாறும்" என்று எச்சரித்து முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!