`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி!

மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அன்புமணி ராமதாஸ்

நீண்ட இழுபறிக்குப் பிறகு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான  இடம் அறிவிக்கப்பட்டுவிட்டது. மதுரை தோப்பூர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டது. எனினும் தஞ்சாவூர், அரியலூர் பகுதிகளில் எய்ம்ஸ் கொண்டுவரப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், செங்கிப்பட்டியைத் தவிர்த்து மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பா.ஜ.க-வினரும் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, பா.ஜ.க ஆட்சியில்தான் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது எனக் கூறி சமீபத்தில் தி.மு.க-வை கடுமையாகச் சாடியிருந்தார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். 

இந்நிலையில், மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான்தான் என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,   ``மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான்தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அ.தி.மு.க அரசு அதைச் செயல்படுத்தவில்லை. எய்ம்ஸ் கொண்டுவந்தது நான்தான் என்பது  அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும். அப்போது அரசியலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது. இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி" எனத் தமிழிசையை கடுமையாகச் சாடியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!