வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (25/06/2018)

கடைசி தொடர்பு:11:45 (25/06/2018)

தமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞர்! கவனித்து அனுப்பிய பாஜகவினர்

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கபெருமாள்கோயில் பகுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

பா.ஜ.க பிரமுகர்கள் பேசி முடித்தபின்பு கடைசியாக பேசத்தொடங்கினார் தமிழிசை சௌந்தரராஜன். அப்போது  ``தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் காலையில் போராட்டம் நடத்தினால் கைது செய்து மாலையில் விடுவித்துவிடுகிறார்கள். இனி அப்படி விடுவிக்க முடியாது. ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டி தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்போது நாங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கிறோம். இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள். பசுமைச் சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக் கூடாது. ரோடு போடக்கூடாது எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ் வெட்டாத மரமா” எனத் தமிழகக் கட்சிகளை வசைபாடிக்கொண்டிருந்தார் தமிழிசை.

தாக்க வந்ததாகக் கைது செய்யப்பட்ட இளைஞர்

தமிழிசை சௌந்தரராஜன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென மேடைக்கு ஏறிய வாலிபர், தமிழிசையை நோக்கி வேகமாகச் சென்றார். இதனால் மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரைத் தமிழிசை அருகே செல்லவிடாமல் தடுத்தனர். இதைத் தொடர்ந்து தமிழிசையை தாக்க வந்ததாகக் கூறி மேடையிலேயே பா.ஜ.க பிரமுகர்கள் அவரைச் சரமாரியாக தாக்கினார்கள். பின்பு அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மறைமலைநகர் காவலர்கள் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பானது. இதனால் அடுத்த சில நிமிடங்களிலேயே தனது உரையை முடித்துக்கொண்டார் தமிழிசை. போகும்போது, “தமிழக காவல்துறையினர் எங்களுக்குச் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை” எனக் குற்றம்சாட்டிவிட்டுக் கிளம்பிவிட்டார் தமிழிசை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க