வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (25/06/2018)

கடைசி தொடர்பு:10:59 (25/06/2018)

”விமர்சனங்கள் மூலம் உங்களை சீர் செய்து கொள்ளுங்கள்!” எழுத்தாளர் பெருமாள் முருகன்

``விமர்சனங்கள் மூலம் உங்களைச் சரி செய்துகொள்ளுங்கள்” என எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்திருக்கிறார்.

”விமர்சனங்கள் மூலம் உங்களை சீர் செய்து கொள்ளுங்கள்!” எழுத்தாளர் பெருமாள் முருகன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று கருத்துரிமை கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எழுத்தாளர் பெருமாள் முருகன், ``கருத்துரிமைக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், எப்படியாவது அதைத் தடுத்திட வேண்டும் என்பதற்காக, நாம் அனைவரும் எழுத்து, உரையாடல், போராட்டம் எனப் பல தளங்களில் தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். நாம் நினைக்கும் கருத்தை எழுத்து, பேச்சு என எந்த வடிவத்திலும் வெளிப்படுத்துவதற்கான உரிமை நமக்கு வேண்டும். அந்தக் கருத்து எவ்வளவு தவறானது என்று கருதினாலும் அதனை வெளிப்படுத்துவதற்கான அடிப்படைச் சுதந்திரம் நமக்கு வேண்டும். அப்படி நாம் வெளிப்படுத்திய பின்னர் அந்தக் கருத்துகளையொட்டி ஆதரித்தோ, எதிர்த்தோ அதுகுறித்துவிவாதிப்பதற்கான வாய்ப்புகளையும் நாம் வழங்க வேண்டும். எனவே, அதுபோன்ற விவாதங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் கருத்துகளின் மீது விமர்சனங்கள் வரும்போது, அதில் எடுத்துக்கொள்வதற்கு ஏதேனும் இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம். ஒன்றும் இல்லை என்றால் அதைப் புறக்கணித்துவிடலாம். விமர்சனங்கள் பற்றி என்னுடைய முன்னோடி எழுத்தாளர்களிடமிருந்து நான் கேட்ட வாசகங்கள் இவைதான். 

மாநாடு

விமர்சனங்களில் எடுத்துக்கொள்ள ஏதேனும் இருந்தால் அதன் மூலம் உங்களைச் சரி செய்து கொள்ளுங்கள். அதுதான் ஒரு கருத்தின் மீது நாம் வைக்கக்கூடிய விவாதமுறை. எந்தக் கருத்தாக இருந்தாலும் அந்தக் கருத்தைப் பொருட்படுத்தி விவாதிப்பதுதான் ஜனநாயக  சமூகத்தினுடைய அடிப்படைத்தன்மை. இதைத்தான் கருத்துரிமை பேசக்கூடிய நம்மைப் போன்றவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். ஆனால், நாம் யாரை நோக்கிப் பேசுகிறோமோ, அந்த எதிர்த்தரப்பினர் அந்தக் கருத்துரிமையைப் பார்க்கும் முறையே வேறு. அதாவது, அவர்கள் கருத்துக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறதேயொழிய மற்றவர்கள் கருத்துக்களுக்கு உரிமை இல்லை என்ற பார்வையில் இருக்கிறார்கள். எதிர்த்தரப்பினருக்குக் கருத்துரிமை பற்றியோ அல்லது அதன் கோட்பாடுகள் பற்றியோ தெரியாது என்பதை நான் நம்பவில்லை. ஏனென்றால் அவர்கள் தெரிந்தேதான் அதனைச் செய்கிறார்கள். பிறருடைய கருத்துகளை எதிர்கொள்வதற்கான வலு, அவர்களிடம் இல்லை. ஆனால், அவர்கள் தங்களுடைய கருத்துகளைத் திரும்ப திரும்பச் சொல்வதன் மூலமாக, அந்தப் பிற்போக்குக் கருத்துகளுக்கு ஒரு வலிமை ஊட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். மரபு, கலாசாரம், வழிவழியாக வந்தது என்றெல்லாம் சொல்லி, சில கருத்துகளை எடுத்துப் பேசும்போது, அந்தக் கருத்துக்கு ஆதரவாக வெகுஜன மக்களை திரட்டுவது எளிது. ஏனென்றால், அந்தக் கருத்துகள், மக்களின் மனதில் ஊறிக்கிடக்கக்கூடியவை. மேலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறையாகவும் இருக்கக்கூடிய ஒன்று. அதனை உணராமலே தங்களுடைய வாழ்க்கையை அவர்கள் நடத்திச் சென்றுகொண்டிருக்கின்றனர். ஆனால், இன்று அந்த மக்களின் அன்றாட நடவடிக்கையில் இருக்கக்கூடிய கருத்துகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து, அதுதான் உங்களுடைய அடையாளம் என்று சொல்லி அவர்களுக்கே தங்களுடைய அடையாளத்தைக் காட்டுவதாக இந்தத் தரப்பினர் செயல்படுகின்றனர். அப்படி ஒரு கருத்தை மக்களின் அடையாளமாக மாற்றிவிட்டு, அதனைத் திரும்ப திரும்ப எடுத்துச் சொல்லி, `இதற்கு ஆபத்து வந்துவிட்டது. இதற்கு மாற்றுக்கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள், நாட்டுக்கு எதிரானவர்கள்’ என்ற கருத்தைத் திரும்ப திரும்ப வலியுறுத்துகின்றனர்.

தமுஎகச 14வது மாநாட்டில் கலந்துகொண்ட பெருமாள் முருகன்

திரும்பத் திரும்ப ஒரு கருத்தைச் சொல்லும்போது அந்தக் கருத்தை வெகுஜன தளத்தில் நிறுவிட முடியும் என்று நினைக்கின்றனர். நாம் அறிவுத் தளத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் வெகுஜன தளத்தில் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். இதுதான் இரண்டு தரப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு. `அறிவுபூர்வமாகப் பேசுங்கள், விவாதிக்க வாருங்கள், பதில் சொல்லுங்கள்' என்று நாம் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். ஆனால். அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் மக்களுடைய உணர்ச்சிகளை பதம்பார்க்கும் விதத்தில், அவர்களுடைய நம்பிக்கைகள் குலைந்துபோய்விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி, அதனை அடையாளமாக்கி அரசியல் செய்துகொண்டிருகின்றனர். ஆகவே, எதிர்த்தரப்பில் கருத்துரிமை சார்ந்து பேசும் விஷயங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. இந்தச் சூழ்நிலையில் கருத்துரிமை பற்றிய விஷயங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியலைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்ஸியர்கள், பெரியாரியக் கட்சிகள், அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய அமைப்பினர் என அனவரும் பல தளங்களில் ஒன்றுசேர்ந்து செயல்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். மேலும் இம்மூன்று அமைப்புகளும் இணைகின்றன. அதேபோல இம்மூன்றினுடைய கொள்கைகளும் இணைய வேண்டியது அவசியம். அதுதான் நாம் கருத்துரிமை நோக்கிச் செல்லவும், அதனைக் காப்பாற்றுவதற்கும் அடிப்படையானது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்