வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (25/06/2018)

கடைசி தொடர்பு:10:10 (26/06/2018)

9 மாதங்களுக்குப் பிறகு மீன்பிடிக்க அனுமதி... மகிழ்ச்சியில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 9 மாதங்களாக, கடலில் தங்கி மீன்பிடிப்பதற்கு அனுமதி கேட்டுப் போராடிய விசைப்படகு மீனவர்கள்,  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்  இன்று அதிகாலையில் கடலுக்குள் மீன் பிடிக்கச்  சென்றனர்.

விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 259 விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. இதில் 71 விசைப்படகுகள் மட்டுமே முறையாகப் பதிவு செய்யப்பட்டவை. மற்ற விசைப்படகுகள் பதிவு செய்யப்படாதவை. தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன் படி விசைப்படகுகள் 20 மீட்டர் நீளமும், 150 குதிரை திறன் இயந்திரமும் கொண்டதாக இருக்க வேண்டும்.

இதில், 71 விசைப்படகுகள் மட்டுமே இந்த விதிகள்படி உள்ளன. மற்ற விசைப்படகுகள் இந்த அளவைவிட அதிகமானதாக உள்ளன. இதனால், அவற்றைப் பதிவு செய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால், தூத்துக்குடியில் உள்ள பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

20 மீட்டர் நீளம் மற்றும் 150 குதிரைதிறன் இயந்திரம் என்ற அளவுக்கு மேல் உள்ள விசைப்படகுகளுக்கு, மத்திய கப்பல் துறையின் உதவியுடன், தமிழ்நாடு மீன்வளத்துறை தற்காலிக பதிவுச்சான்று வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசைப்படகுகளுக்கு தற்காலிக பதிவுச்சான்று வழங்கி கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

கடலுக்குச் செல்லும் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்

ஆனால், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பெரிய விசைப்படகுகளை தங்களால் பதிவு செய்ய இயலாது என மீன்வளத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், நேற்றிரவு 10 மணியளவில் மீன்வளத்துறையின் சார்பில் பதிவு செய்யப்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லலாம் என அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 14-ம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் முடிந்தும், இன்று அதிகாலையில், சுமார் 9 மாதங்களுக்குப் பின்னர் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள 259 விசைப்படகுகளில் 175 படகுகள் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.

``மீன்வளத்துறை முன்கூட்டியே அறிவிக்கை செய்திருந்தால் அனைத்து விசைப்படகுகளும் கடலுக்குச் சென்றிருக்க வாய்ப்பாக இருந்திருக்கும்.  தாமதமான அறிவிக்கையால் மீனவர்கள் போதுமான அளவில் வராத காரணத்தினால் சுமார் 80 படகுகள் செல்லவில்லை.  நாளை அனைத்து விசைப்படகுகளும் கடலுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது" என மீனவர்கள் தெரிவித்தனர்.

9 மாதங்களுக்குப் பிறகும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விசைப்படகு கடலுக்குள் சென்றதை முன்னிட்டு கைவண்டி இழுப்போர்,  ஐஸ் பார் உடைப்போர், கூடை சுமப்போர் ஆகிய மீன்பிடித் தொழில் சார்ந்தோறும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க