மக்களின் நீண்டகால கனவை நிறைவேற்றிய ஓ.பி.எஸ் குடும்பத்துக்கு முதல் மரியாதை!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியுடன் மக்களின் நீண்ட கால கனவான பெரியகுளம் பெரியகோயிலில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.

ஓபிஎஸ்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ளது பெரியகோயில் எனப்படும் பாலசுப்பிரமணியர் திருக்கோயில். இன்று இக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் சிறப்பாக புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரம்  திறக்கப்பட்டது. மூலவரான ராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிரசித்திபெற்ற பெரியகுளம் பெரியகோயிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்பது பெரியகுளம் மக்களின் நீண்ட கால கனவு.

அதைக் கட்டுவதற்கும் கோயில் பராமரிப்புக்கும் தேவையான அனைத்து செலவுகளிலும் மிகப்பெரிய பங்காற்றியவர் ஓ.பன்னீர்செல்வம்தான். இதனால் இன்று நடந்த கோயில் கும்பாபிஷேகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்துக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டது. இதில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைவகித்தார். அவரது மூத்தமகன் ரவீந்திரநாத்குமார், இளையமகன் பிரதீப் மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், பெரியகுளம் பொதுமக்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி செய்துகொடுக்கப்பட்டது. பாதுகாப்புக்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!