தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ-க்களின் வழக்கு மாற்றப்படுமா? நாளை மறுநாள் தெரியும்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை வேறுநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. 

உச்ச நீதிமன்றம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை. எனவே, முதல்வரை மாற்றுங்கள் எனக் கூறி தமிழக ஆளுநரிடம் மனு அளித்தனர் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள். இதுதொடர்பாக விளக்கம் அளிக்காததால் ஜக்கையனை தவிர்த்து மற்ற 18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர். இந்த உத்தரவை எதிர்த்து, 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதியரசர் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்த நிலையில், கடந்த 14-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், 'தகுதிநீக்க உத்தரவு செல்லும்' என்று தலைமை நீதிபதியும், 'தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது' என நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர். இவர்களின் மாறுபட்ட தீர்ப்பால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இவர் விசாரணையைத் தொடங்கவுள்ளார். 

இதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்த 18 பேரில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர மற்ற 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், சென்னை உயர் நீதிமன்றம் தகுதி நீக்க வழக்கை விசாரித்தால் மேலும் தாமதமாகும். இதனால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கோ அல்லது உச்ச நீதிமன்றமோ விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங் முறையீடு செய்தார். கோரிக்கையை ஏற்று வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!