வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (25/06/2018)

கடைசி தொடர்பு:12:23 (25/06/2018)

`ஸ்கெட்ச்` போடுவதில் இவர் கில்லாடி - பிரபல ரவுடி சி.டி மணியின் பரபர பின்னணி 

ரவுடி சி.டி மணி

 
சென்னை  போலீஸாரிடம் சிக்கிய பிரபல ரவுடி சி.டி.மணி, ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடி என்கின்றனர் விவரம் தெரிந்த போலீஸார். அவரின் கூட்டாளிகள்தான் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.  

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சி.டி மணி மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனர். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து சி.டி மணியிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.  சி.டி மணி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து இன்று, சி.டி மணி மற்றும் அவரின் கூட்டாளிகள் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நொண்டியபடி நீதிமன்ற வளாகத்துக்குள் சி.டி.மணி அழைத்துச் செல்லப்பட்டார்.  அவரை ஜூலை 3-ம் தேதிவரையும் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.டி.மணியின் ஃப்ளாஷ் பேக் குறித்து போலீஸார் கூறுகையில், ``தி.நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் சி.டி விற்பனையை மணி என்ற மணிகண்டன் விற்றுவந்தார். அப்போது, அடிக்கடி போலீஸ் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அடிக்கடி மணியின் பெயர், காவல்துறையில் பிரபலமானது. இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல தாதா ஒருவருடன் மணிக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு மணியின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. அந்த தாதாவின் வலதுகரமான மணி, சி.டி விற்பனை செய்துவந்ததால் சி.டி மணி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். தேனாம்பேட்டை போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலில் சி.டி மணியின் பெயரும் இடம் பெற்றது. இந்தச் சமயத்தில் திண்டுக்கல் தாதாவின் மறைவுக்குப்பிறகு சி.டி மணி தலைமையில் புதிய டீம் உருவானது. சி.டி மணியின் தலைமையைப் பிடிக்காத சிலர் அவரை விட்டு விலகி  எதிரிகளாக மாறினர். இதனால், சி.டி மணியின் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. 

 ரவுடி சி.டி.மணியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கத்தி, துப்பாக்கிகள்

இதற்கிடையில் ஆள் கடத்தல், துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொலை என அடுத்தடுத்து சி.டி மணி மீது வழக்குகள் பாய்ந்தன. அவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் உள்ளன. சி.டி மணியின் தரப்பினரால் எதிரிகள் கொல்லப்பட்டனர். பழிக்குப்பழியாக சி.டி மணி கூட்டாளிகளும் கொல்லப்பட்டனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியும் சி.டி  மணியும் நண்பர்களாக இருந்தனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடியின் எதிரியான, சென்னை மலையம்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினுவை கொலை செய்ய ஸ்கெட்ச் போடப்பட்டது. ஆனால், அந்த சதித் திட்டத்தை நாங்கள் முறியடித்தோம். 

சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒரு ரவுடியும் வேளச்சேரியைச் சேர்ந்த ரவுடிக் கும்பலும் சி.டி மணியை கொல்ல நீண்ட காலமாக சதித்திட்டம் திட்டிவந்தனர். இதனால், எப்போதும் துப்பாக்கியோடு மணி வலம் வந்தார். அவரின் பாதுகாப்புக்காக எந்நேரமும் ஒரு கூட்டம் இருக்கும். ரவுடி பினுவின் கைதுக்குப்பிறகு தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால், எங்களிடமிருந்து ரவுடி சி.டி மணி ஒவ்வொரு முறையும் தப்பிவந்தார். ஆனால்,  ஆந்திரா, கர்நாடகா என பல இடங்களில் பதுங்கியிருந்த சி.டி மணியின் நடமாட்டம் சென்னையிலும் அவ்வப்போது இருந்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சி.டி மணியை கைது செய்ய தனிப்படை அமைத்தோம். 

ஸ்ரீபெரும்பதூர் பகுதியில் சொகுசு காரில் ரவுடி சி.டி மணியும் அவரின் கூட்டாளிகளும் செல்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்தமுறை எப்படியும் அவரைக் கைது செய்ய அதிரடியாக களத்தில் இறங்கினோம். சி.டி மணியின் காரை நாங்கள் பின்தொடர்ந்தோம். எங்களைக் கண்டதும் சி.டி மணி காரில் வேகமாகச் சென்றார். நாங்களும் அவரை விரட்டினோம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் சி.டி மணியை விரட்டியபோது திடீரென அவரின் கார் முட்டுக்காடு பகுதிக்குள் நுழைந்தது. உடனே அங்கு அவரின் காரை வழிமறித்தோம். துப்பாக்கியால் எங்களை நோக்கிச் சுட சி.டி மணி தரப்பினர் முயன்றனர். உடனே நாங்கள் அவரை எச்சரித்தோம். இதனால், வேறுவழியின்றி சி.டி.மணி எங்களிடம் அவர் சரண் அடைத்தார். 

ரவுடி சி.டி.மணியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட  கார், பைக்

அவருடன் வினோத் என்ற வினோத்குமார், ஹரி என்கிற ஹரிஹரன், சுரேஷ் என்கிற சொறி சுரேஷ், இளங்கோ, மாதவன், சிவக்குமார் ஆகியோரைக் கைது செய்தோம். அவர்களிடமிருந்து லைசென்ஸ் இல்லாத கைதுப்பாக்கி, தோட்டாக்கள், பட்டா கத்திகள், சொகுசு கார், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். சி.டி மணியிடம் மட்டும் ரகசிய இடத்தில் வைத்து விடிய, விடிய விசாரித்தோம். அப்போது அவர் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார். தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் அவர் மற்றும் அவரது கூட்டாளிகளை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

பெயரைக் குறிப்பிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சி.டி மணி மீது கடந்த 2007ல் தேனாம்பேட்டையில் வெங்கடா கொலை வழக்கு, கோயம்பேட்டில் வாழைத் தோப்பு சதீஷ் கொலை வழக்கு, கே.கே.நகரில் சங்கர், திவாகரன் என இரட்டைக் கொலை வழக்கு ஆகியவை முக்கியமானவை. நடுமண்டையில் வெட்டிக் கொலை செய்வதே சி.டி மணியின் ஸ்டைல். சி.டி மணி, காதலித்து திருமணம் செய்தவர். அமைதியாகவே பேசுவார். ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடி. சி.டி.மணிக்கு தமிழக காவல்துறையிலேயே நம்பிக்கையானவர்கள் உள்ளனர். இதனால்தான் ஒவ்வொரு முறையும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்போது தப்பிவிடுவார். ஆனால், இந்தமுறை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் சி.டி மணியை கைது செய்யும் ஆபரேசன் தெரியும். இதனால்தான் எங்களிடம் வசமாக அவர், சிக்கிக்கொண்டார்" என்றார். 

சி.டி மணியைப் பிடித்த போலீஸார், அவரின் இடது கை, கால்களை உடைத்துவிட்டதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனால்தான் அவர், நீதிமன்றத்துக்குச் செல்லும்போது அவரை போலீஸார் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். மேலும், அவரால் நடக்கக்கூட முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவரைக் கைது செய்தபிறகு என்கவுன்ட்டரில் போடப்போவதாகவும் தகவல் வெளியானது. இதனால் சி.டி மணியின் உறவினர்களும் வழக்கறிஞர்களும் அவரைத் தேடி விடிய, விடிய பரங்கிமலை காவல் சரகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தையே சுற்றி வலம் வந்தனர். ஆனால், சி.டி மணியை வைத்திருந்த ரகசிய இடம் குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறுயாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.