பெட்டிக்கடைகள், ஹோட்டல்கள், காய்கறிக் கடைகளில் மதுவிற்பனை! கொந்தளித்த பொதுமக்கள்

ராமேஸ்வரம் மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் கள்ளத்தனமாக நடந்து வரும் மது விற்பனையைத் தடுக்கக் கோரியும், அரசு மதுக்கடை திறக்க உள்ளதை ரத்து செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் திருட்டுத்தனமாக நடந்து வரும் மது விற்பனையைத் தடுக்கக் கோரியும், மதுக்கடை திறக்க உள்ளதை அரசு ரத்து செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருட்டுத்தனமாக மது விற்பதை தடுக்க கோரி பெண்கள் சாலை மறியல்

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வந்தன. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதால் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தில் இருந்த மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பாம்பனில் மட்டும் 3 கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. ராமேஸ்வரம் பகுதியில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் திருட்டுத்தனமாக மது விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. பாம்பனில் உள்ள மதுக்கடைகளிலிருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வரும் சிலர் ராமேஸ்வரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், ஹோட்டல்கள், காய்கறி கடைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வைத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மது விற்பனை தடை செய்யப்பட்ட ராமேஸ்வரத்தில் தனியார் சிலர் தாராள மது விற்பனையில் ஈடுபடுவதால் மீனவர் குடும்பங்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மீன்பிடிக் கூலிகளாக உள்ளவர்கள் அதிக விலை கொடுத்து மதுவை வாங்குவதால் அவர்களின்  குடும்பத்தினர் வருவாயினை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் கரையூர், வேர்க்கோடு, புலித்தேவன் நகர்ப் பகுதிகளில் தடையின்றி நடந்து வரும் மது விற்பனையைத் தடுக்கக் கோரியும், இப்பகுதிகளில் புதிதாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ள அரசு மதுக்கடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த மறியலினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த துறைமுகக் காவல் நிலைய போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருட்டுத்தனமாக மதுபானம் விற்கப்படுவதை தடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!