வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (25/06/2018)

கடைசி தொடர்பு:14:50 (25/06/2018)

‘ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார் ‘- ஆளுநருக்கும் சாவல்விடும் ஸ்டாலின்

``மாநிலத்தின் சுயாட்சிக்காக 7 வருடம் இல்லை. ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்'' என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

பன்வாரிலால் புரோஹித் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு அடுத்த சில மாதங்களில் ஓரிரு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். இது அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது வரை தொடர்ந்து பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் மாவட்டங்களில் தொடர்ந்து தி.மு.க-வினர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், `ஒரு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆளுநரைச் செயல்படவிடாமல் தட்டுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' எனக் கூறப்பட்டிருந்தது.

ஸ்டாலின்

இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத்தொடர் 10 நாள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் இன்று கூடியது . அதில் ஆளுநர் குறித்து சட்டசபையில் பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்  தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,  ``தமிழக ஆளுநர் வரம்பு மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மாவட்டந்தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார். இது முறைதானா எனக் கேள்வி கேட்டு அதுகுறித்து சட்டசபையில் பேச அனுமதி கேட்டேன். ஆனால் சபாநாயகர், ஆளுநர் குறித்து அவையில் பேச அனுமதி இல்லை எனக் கூறி அதை மறுத்துவிட்டார். 

ஜெயலலிதா முதல்வராக இருந்த 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போது ஆளுநராக  இருந்த சென்னா ரெட்டியைப் பற்றி  சட்டசபையில் நீண்ட விவாதமே நடத்தப்பட்டு நிறைவாக அவர் மீது ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரை நீக்கத் தீர்மானமே நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டி தற்போது உள்ள ஆளுநரைப் பற்றி நான் பேசினேன். ஆனால், அது 1995 கதை அதுபற்றி இப்போது பேச முடியாது எனக் கூறி அனுமதி மறுத்துவிட்டனர். 

மேலும், நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆளுநரைச் செயல்படவிடாமல் தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மாநில சுயாட்சிக்காகவும் மக்களுக்காகவும் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார். அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த மாநில சுயாட்சிக் கொள்கைகளை நிலை நிறுத்த தி.மு.க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளது. ஆளுநரின் ஆய்வுப் பணி தொடர்ந்தால் தி.மு.க-வின் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து நடைபெறும்“ எனக் கூறினார்.

தொடர்ந்து, பசுமை வழிச்சாலை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், `` பசுமை வழிச்சாலை நல்ல திட்டம் தான். நான் அதை எதிர்க்கவில்லை. ஆனால், அதைச் செயல்படுத்தும் முன் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். அவர்களின் நிலை அறிந்த பிறகுதான் அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால், தற்போதுள்ள எடப்பாடி அரசு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர்களது ஆட்சி முடிவதற்குள் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்று மட்டும்தான் யோசிக்கிறது “ என தெரிவித்தார்.