வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (25/06/2018)

கடைசி தொடர்பு:15:25 (25/06/2018)

`கணவனைத் தொடர்ந்து மனைவியும் கின்னஸ் சாதனை' - டேக்வாண்டோ போட்டியில் அசத்திய மதுரைத் தம்பதி!

டேக்வாண்டோ போட்டியில் மதுரையைச் சேர்ந்த தம்பதி கின்னஸ் சாதனை படைத்து அசத்தியுள்ளனர். இதன் மூலம் இப்போட்டியில் சாதனை படைத்த முதல் இந்திய ஜோடிகள் என்ற பெருமையினைப் பெற்றுள்ளனர்.

கின்னஸ் சான்றிதழுடன் தம்பதி

மதுரையில் டேக்வாண்டோ தற்காப்புக் கலை பயிற்சி அகாடமி வைத்துள்ளார் நாராயணன். இவர் டேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அகாடமியில் பயிலும் மாணவர்கள் பலரும் கின்னஸ் சாதனை படைத்து மதுரை மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்துவருகின்றனர். தலைமைப் பயிற்சியாளர் நாராயணன் எல்போ ஸ்ட்ரைக் பிரிவில் 1 நிமிடத்தில் 160 முறை இலக்கைத் தொட்டு பாகிஸ்தான் வீரரின் சாதனையை முறியடித்தார். தற்போது அவரது மனைவி ஸ்ருதி பெண்கள் பிரிவில் அதே போட்டியில் ஒரு நிமிடத்தில் 211 முறை இலக்கைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளார். 

டேக்வாண்டோ தற்காப்பு கலை

 

இதனால் கணவன், மனைவி இருவரும் டேக்வாண்டோ போட்டியில் எல்போ ஸ்ட்ரைக் பிரிவில் கின்னஸ் சாதனை படைத்த முதல் இந்தியர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். கணவரைத் தொடர்ந்து மனைவியும் கின்னஸ் சாதனை படைத்ததற்கு மதுரையைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பயிற்சியாளர் நாராயணன் கூறுகையில்,  ``நாங்கள் இருவரும் தொடர்ந்து டேக்வாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு இன்னும் பல கின்னஸ் சாதனையைப் படைப்போம்" என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.