தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்!

தஞ்சாவூர் கலைத்தட்டுக் கலைஞர்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

தஞ்சாவூர் கலைத்தட்டு

தஞ்சாவூர் கலைத்தட்டுகள் உலக அளவில் புகழ்பெற்றது. கலைப்பொக்கிஷமாகவும் நினைவுப் பரிசாகவும் கடல் கடந்து பல்வேறு நாடுகளுக்குத் கலைத்தட்டுகள் பயணம் செய்துகொண்டிருக்கின்றன. தஞ்சாவூரில் கடந்த பல நூறு ஆண்டுகளாக கலைத்தட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களில் அழகிய கலைநயத்துடன் கூடிய கடவுளின் உருவங்கள், மான், மயில், தாமரை, தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்டவைகள் பொறிக்கப்படுகின்றன. இவைகளுக்கு உலகளவில் மவுசு அதிகம். தஞ்சாவூரில் செய்யப்படும் இந்தக் கலைத்தட்டுகள், இந்திய அரசின் நினைவுப் பரிசாக பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் தஞ்சாவூரில் மட்டுமே தயார் செய்யப்பட்டு வந்த இந்த கலைத்தட்டுகள், நாளடைவில் எல்லை கடந்து பல்வேறு ஊர்களிலும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் தஞ்சாவூரில் பல தலைமுறையாக இவைகளை தயார் செய்து வரும் கலைஞர்களில் சிலருக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புவிசார் குறியீடு சான்றிதழும் தனிமுத்திரையும் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த பல தலைமுறைகளாக இதனை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தஞ்சாவூரில் இருக்கிறார்கள். இவர்களது திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இவர்களின் தொழிலுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் புவிசார் குறியீடு பதிவகம் தஞ்சாவூரைச் சேர்ந்த 21 கைவினைக் கலைஞர்களுக்கு புவிசார் குறியீடும், தனி முத்திரையும் வழங்கியுள்ளது. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி நேற்று வழங்கினார். இதுகுறித்துப் பேசிய அவர் ‘’இனி புவிசார் குறியீடு சான்று பெற்றவர்கள் மட்டுமே இதற்கான பிரத்யேக லோகோவைப் பயன்படுத்த முடியும். இந்த லோகோவுடன் உள்ள கலைத்தட்டுகள் மட்டுமே தஞ்சாவூர் கலைத்தட்டுகள் எனச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும். மற்ற ஊர்களில் கலைத்தட்டுகள் செய்பவர்கள், இனி தஞ்சாவூர் கலைத்தட்டு என்ற பெயரை பயன்படுத்த முடியாது. உள்ளூர் மற்றும் வெளியூர் விமான நிலையங்களில் புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால் இனி தஞ்சாவூர் கலைத்தட்டுகள் அதிகளவில் விற்பனையாகும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!