வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (25/06/2018)

கடைசி தொடர்பு:14:46 (25/06/2018)

தம்பி கண்டித்ததால் அக்கா செய்த கொடூரச் செயல்! பறிபோன 4 பேரின் உயிர்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்  நேற்று மது குடித்த சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், குடித்த மதுவில் விஷமில்லை, சாப்பிட்ட கோழிக் குழம்பில் விஷம் கலக்கப்பட்டதாக  வள்ளி என்ற பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வள்ளி

சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் நேற்று மாலை மது குடித்து 8 பேர் மயங்கிக் கிடப்பதாக வந்தத் தகவலையடுத்து காவல்துறையினரும் பொதுமக்களும் சேர்ந்து அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், கணேசன், முகமது இப்ராகிம், முருகன், 15 வயது சிறுவன் ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஐயப்பன், ஹரிகரன், சரவணகுமார், ஜனார்த்தனன் ஆகியோர் சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பட்டாசு ஆலையில் பணியாற்றும் இவர்கள் அனைவரும் குற்றாலம் செல்வதாக பொய் சொல்லிவிட்டு, சிறுகுளம் கண்மாய்க்கரையில் மது குடித்துள்ளனர்.

இந்த நிலையில் டாஸ்மாக்கில் விற்பட்ட மதுதான் விஷமாகி உயிரைப் பறித்துவிட்டதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தத் தயாரானார்கள். இத்தகவல் கேள்விப்பட்டதும் அரசு தரப்பு அதிர்ச்சியைடைந்து, விருதுநகர் எஸ்.பி. ராஜராஜனும், தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரனும் சம்பவம் இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்ய உத்தரவிட்டனர்.

விஷம் கலந்த உணவை சாப்பிட்டு உயிரிழந்தவர்

இந்த நிலையில், மதுவில் விஷம் கலக்கப்படவில்லை; அவர்கள் சாப்பிட்ட கோழிக் குழம்பில்தான் குருணை மருந்து கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், பலியான முருகனின் சகோதரி வள்ளியை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவனைப் பிரிந்து வாழும் வள்ளி வேறொருவருடன் தொடர்பில் இருந்ததைத் தெரிந்து தம்பி முருகன்  கண்டித்திருக்கிறார். இதனால், ஆத்திரமான வள்ளி, தம்பி முருகனைக் கொல்லும் எண்ணத்தில்  கோழிக் குழம்பில் குருணை மருந்தை கலந்து வைத்துவிட்டு வெளியூரில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டார். அதனால், முருகனோ அந்தக் குழம்புப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் மது குடிக்கும்போது நண்பர்களுடன்  சாப்பிட்டிருக்கிறார். அதனால்தான் நான்கு பேர் பலியாகியும், நான்கு பேர் உடல்நிலை மோசமான நிலையும் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். வள்ளியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க