வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (25/06/2018)

கடைசி தொடர்பு:14:48 (25/06/2018)

பிரபல ரவுடி சி.டி மணியை சிக்க வைத்த போன் கால் - காட்டிக் கொடுத்தது யார்?

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சி.டி மணி மற்றும் அவரின் கூட்டாளிகள் காரில் செல்லும் தகவல் போன் மூலமே போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அந்த போனில் பேசியவர் யார் என்று மணிக்கு நெருக்கமானவர்கள் ரகசியமாக விசாரித்துவருகின்றனர்.

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரவுடி சிடி மணி

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சி.டி மணி மற்றும் அவரின்  கூட்டாளிகளை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் மாஜிஸ்திரேட், எப்படி உங்களின் கை, கால்கள் உடைந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு,  பைக்கில் இருந்து நானும், ஹரி, வினோத் ஆகியோர் கீழே விழுந்துவிட்டோம். இதனால்தான் எங்களின் கை, கால்கள் முறிந்துவிட்டதாகத் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. அதே பதிலை ஹரியும் வினோத்தும் கூறினர். இதையடுத்து சி.டி.மணி உட்பட அவரின் கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காரில் சி.டி மணி மற்றும் அவரின் கூட்டாளிகளைப் பிடிக்க விரட்டினோம். ஒருகட்டத்தில் காரிலிருந்து இறங்கிய சி.டி மணி, பின்னால் வந்த பைக்கில் தப்பினார். அந்த பைக்கில் மூன்று பேர் சென்றனர். அவர்கள் வேகமாகச் சென்றபோது பைக், சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. அதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். மணிக்கு, இடது கை, கால் ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஹரிக்கு, வலது காலிலும் வினோத்துக்கு இடது காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது" என்றனர். 

மணி மீது 8 கொலை வழக்குகள் உள்ளன. அதில் 2 வழக்குகளில் அவர் விடுதலையாகிவிட்டார். 15 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. நான்கு முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  மணியை போலீஸார் பிடிக்க கடந்த ஒரு வாரமாக தூக்கமில்லாமல் தனிப்படையினர் தவித்துள்ளனர். முதலில் அவர் சென்னையின் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கும் தகவல்தான் போலீஸாருக்குக் கிடைத்தது. இதனால், அந்த லாட்ஜை போலீஸார் கண்காணித்துவந்தனர். ஆனால், சி.டி மணி அங்கு தங்காமல் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்தார். அதன்பிறகு தனிப்படையில் உள்ள உயரதிகாரி ஒருவருக்கு போனில் ஒரு தகவல் வந்தது. அதில் பேசியவர், சி.டி மணி மற்றும் அவரின் கூட்டாளிகள் காரில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார். உடனடியாக தனிப்படை போலீஸார் சி.டி மணியின் காரை விரட்டிப் பிடித்தனர். ஆனால், போலீஸாரிடமிருந்து தப்பிக்க பைக்கில் மணி, ஹரி, வினோத் ஆகியோர் தப்பினர். விபத்தில் சிக்கிய அவர்களைத் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து மூன்று பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகுதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் சி.டி மணி தலைமறைவாக இருந்துவருகிறார். சென்னை மாங்காடு மலையம்பாக்கம் பகுதியில் ரவுடி பினு, கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடி போலீஸாருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தினார். அதன்பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தலைமறைவு குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார். அதன்பிறகும் ரவுடி சி.டி மணியை போலீஸாரால் நெருங்க முடியவில்லை. அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிய மணி, போலீஸார் பிடிப்பதற்கு முன்பு தப்பித்துக்கொண்டே சென்றார். இதனால்தான் சி.டி மணியைப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர். 

சி.டி மணிக்கு எதிரிகளாக கருதப்படும் ரவுடி கும்பலிடமிருந்தும் அவருடன் இருந்து பிரிந்து சென்றவர்களிடமிருந்தும் முக்கியத் தகவல்களைச் சேகரித்தனர். அதோடு சி.டி மணிக்கு யார், யார் உதவி செய்வார்கள் என்ற விவரத்தையும் சேகரித்தனர். அந்தப் பட்டியலில் உள்ளவர்களைப் போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அடிக்கடி ஒரு நபரிடம் சி.டி மணி மற்றும் அவரின் கூட்டாளிகள் தொடர்புகொள்வது தெரியவந்தது. இதனால் அந்த நபரை போலீஸார் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் மணி, அவரைத் தொடர்புகொள்வதைத் தவிர்த்தார். பண நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது. இதனால், பணத்துக்கு ஏற்பாடு செய்ய வெளியில் வரும் சூழல் அவருக்கு ஏற்பட்டது. 

இதுதான் சரியான நேரம் என்று சி.டி மணிக்கு போலீஸார் வலைவிரித்தனர். அந்த வலையில் வசமாக சி.டி மணியும் அவரின் கூட்டாளிகளும் சிக்கிக்கொண்டனர். சி.டி மணி பிடிப்பட்ட தகவலை முதலில் மறுத்த போலீஸார் நீண்ட நேரத்துக்குப்பிறகே அதை உறுதிப்படுத்தினர். சி.டி மணி கொடுத்த தகவல் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்கின்றனர் விவரம் தெரிந்த போலீஸார்.