ஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை! - கொள்ளையர்களின் கைவரிசை | Jewellery theft in Kumbabhishekam festival

வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (25/06/2018)

கடைசி தொடர்பு:10:09 (26/06/2018)

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய விழாவில் திருடுபோன 70 பவுன் நகை! - கொள்ளையர்களின் கைவரிசை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்தச்செலவில், பெரியகுளம் பெரியகோயிலில் ராஜகோபுரம் எழுப்பி, இன்று கும்பாபிஷேகம் நடத்தினார். இந்த விழாவில் பங்கேற்ற 9 பெண்களிடம், 70 பவுன் நகைகளைக் கொள்ளையர்கள் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் பெரியகோயிலில் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பெரியகோயிலில், இன்று காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் ராஜகோபுரம் எழுப்பி, இன்று கும்பாபிஷேகம் நடத்தினார். இவ்விழாவுக்கு தேனி மாவட்டம் முழுவதிலுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கோயிலுக்கு வந்த பெண்களிடம் ஒரு கும்பல் செயின் திருட்டில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது. 

நகையை பறிகொடுத்தவர்கள்

செயின் திருட்டினால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி (48), பாண்டியம்மாள், விஜயா (65) மணிமேகலை (59), பிச்சையம்மாள் உட்பட 9 பெண்கள் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். திருடப்பட்டது, மொத்தம் 70 பவுன் தங்க நகை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. "எப்படி நகையை அடித்தார்கள் என்றே தெரியவில்லை. எல்லாம் தாலிச்செயின். புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் வந்தோம். உங்கள் நகையை நீங்கள்தான் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா தெரிவித்தார்" என்று ஆதங்கப்பட்டார் நகையைப் பறிகொடுத்த பிச்சையம்மாள்.

தென்கரை காவல்நிலையம்

தண்ணீரைப் பீச்சியடிக்கும்போது நகை திருடப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். பலர் தங்களது நகைகளைக் காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்துக்குப் படையெடுத்துவருகின்றனர். "திருவிழாவுக்கு வந்திருக்கும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்பதைப் பார்க்காமல், ஓ.பன்னீர்செல்வத்தை கவனித்துக்கொள்வதிலேயே கவனமாக இருந்துள்ளனர், பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் மற்றும் ஆய்வாளர் மதனகலா. இப்படி இருந்தால் திருட்டு நடக்காமல் இருக்குமா?" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "கோயிலில் பொறுத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை வைத்து திருடியது யார் என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்" என்றனர். ஒரு குறையும் இல்லாமல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்தச் செய்தியைக் கொண்டுசெல்லலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் அவரது சகாக்கள். அப்படி தெரியும் பட்சத்தில், செயின் திருட்டு சம்பவம் மீது ஓ.பி.எஸ் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.


[X] Close

[X] Close