வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (25/06/2018)

கடைசி தொடர்பு:17:15 (25/06/2018)

`முழு யானையையே சோற்றில் மறைக்கிறார்!’ - முதல்வரைச் சாடும் வேல்முருகன்

க்கள் பிரச்னைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடியதால் பொய் வழக்குகள், தேச விரோத வழக்குகள்மூலம் பழிவாங்கப்பட்டுள்ளேன் என  த.வா.க தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

வேல்முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கிலும், நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்ட வழக்கிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டார். பின்னர், நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பன்னாட்டு முதலாளிகள் மேலும் பணம் சம்பாதிக்க பசுமை நிறைந்த பகுதிகளை அழித்து, பசுமைச் சாலை என்ற 8 வழிச் சாலையைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். மக்கள் போராட்டத்திற்காக என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அடக்குமுறையைக் கையாண்டாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மக்கள் பிரச்னைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடியதால்  பொய் வழக்குகள், தேச விரோத வழக்குகள்மூலம் பழிவாங்கப்பட்டுள்ளேன். சுங்கச் சாவடிக்கு எதிரான போராட்டம், ஆளுநருக்கு எதிரான போராட்டம் என அனைத்துப் போராட்டங்களிலும் நான் ஈடுபட்டதால், தமிழக காவல்துறை நிதானம் இழந்து என்மீது வழக்குப்பதிவு செய்கிறது.

வேல்முருகன்

மத்திய அரசை திருப்திபடுத்தவே தமிழக அரசு என்னைக் கைதுசெய்தது. ராணுவத்தைக்கொண்டு சுட்டுத் தள்ளினாலும் எனது போராட்டம் தொடரும். மன்சூர் அலிகான், கவுதமன் போன்ற போராளிகள்மீது வழக்குத் தொடுத்தது நல்லதல்ல. மத்திய அரசுக்கு விசுவாசம் காட்டும் எடப்பாடி அரசு, மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். ஆளுநர், தனது பணியைத் தடைசெய்தால் 7 ஆண்டு சிறை என பூச்சாண்டி காட்டுகிறார். அதைக் கண்டு தமிழ்ச் சமூகம் பயப்படாது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பார்கள். ஆனால், 8 வழிச் சாலைக்கு விருப்பப்பட்டு நிலம் கொடுத்ததாக முதல்வர் முழு யானையையே சோற்றில் மறைக்கிறார்.

தமிழக அரசுக்கு மக்கள்மீது அக்கறை இருந்தால், சேலம்-சென்னை 8 வழிச் சாலையில் சுங்கச்சாவடி அமைக்க மாட்டோம் எனக் கூற முடியுமா?. இதேநிலை தொடர்ந்தால், ஆட்சியை நிறைவுசெய்த பின்னர், முதல்வரை அவரது உறவினர்கள்கூட மதிக்க மாட்டார்கள். தமிழக அரசின் ஆணவ அடாவடி ஆட்சிக்கு காலம் பதில் சொல்லும். மக்கள், போராட்டம் நடத்துபவர்களை  நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் எனக் கூறும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்" என்றார்.