` 7 ஆண்டு தண்டனையை அனுபவிக்கத் தயார்'- ஆளுநருக்கு எதிராகக் கொந்தளிக்கும் முத்தரசன்

``ஆளுநரின் ஆய்வு நடவடிக்கை தொடர்ந்தால் கண்டிப்பாக எதிர்ப்போம்.  7 ஆண்டுகள் சிறைத் தண்டனை தந்தாலும் அதை அனுபவிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்தார்.  

முத்தரசன்

நாகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில், ``நேற்று வெளியிட்ட ஆளுநரின் அறிக்கை, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.  ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவது ஏற்புடையதல்ல. இது ஜனநாயகத்துக்கு எதிரானது.  ஆளுநருக்குப் பணிந்து செல்வது தமிழக அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது.  தமிழக அரசு, மோடி அரசின் கைப்பாவையாக இயங்குகிறது என்பதையே உணர்த்துகிறது. ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கை தொடர்ந்தால், அதை எதிர்க்கவும் தயங்க மாட்டோம்.  7 ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும் அதை அனுபவிக்கத் தயாராகவே இருக்கிறோம்.

சேலம் முதல் சென்னை வரை 8 வழிச் சாலைக்கான பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.  விவசாயத்தையும் விளைநிலங்களையும், பல லட்சக்கணக்கான மரங்களையும் அழித்து, ஏழைக் குடிசைகளை ஒழித்து, இந்தச் சாலை அமைக்கத் தேவையில்லை.  இதையும் மீறி, தமிழக அரசு 8 வழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றால், ஜூலை 4-ம் தேதி  இந்திய கம்யூனிஸட் கட்சியின் சார்பாக சேலத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் எனத் தொடர்ந்து நடத்துவோம்.  மக்கள் நலனுக்காகப் போராடும் எங்களை சமூக விரோதி, தேசத் துரோகி, தீவிரவாதி என எந்தப் பட்டம் கொடுத்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்றார் ஆவேசத்துடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!