தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: சி.பி.சி.ஐ.டி குழுவினர் 3 வது நாளாகக் கள ஆய்வு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இன்று 3வது நாளாகக் கலவரத்தில் சேதமான வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

ஆய்வு

துப்பாக்கிச்சூடு தொடர்பான 5 முக்கிய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய கள ஆய்வு மேற்கொள்வதற்காகத் தமிழக காவல் துறையின் தடய அறிவியல் துறை நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ஆகியோர் உள்ளடக்கிய 60 பேர் கொண்ட குழு , சி.பி.சி.ஐ.டி போலீஸார் குழு 40 பேர் என மொத்தம் 100 பேர் கடந்த 23-ம் தேதி தூத்துக்குடி வந்தனர். 10 தனித்தனிக் குழுவாகக் கள ஆய்வௌ நடத்தி வருகின்றனர்.

ஆய்வின் முதல் நாளான கடந்த 23-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தினர். நேற்று (24.6.2018) 2-வது நாளாக ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு, தூத்துக்குடி - பாளையங்கோட்டை நான்கு வழிச் சாலை, வி.வி.டி., சிக்னல் பகுதி,  திரேஸ்புரம் போன்ற பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை மேற்கொண்டதுடன் தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது  நாள், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற அண்ணாநகர் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அண்ணாநகர் மெயின்ரோடு மற்றும் தெருக்களிலும் கள ஆய்வு செய்தனர். அப்போது அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு அனுமதி வழங்கிய துணை வட்டாட்சியர் சந்திரனிடம் சம்பவ இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி, ஏ.டி.எஸ்.பி மாரிராஜா விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, மாலையில் அண்ணாநகரில் தடய சோதனை நடத்தினர். அதில், அண்ணாநகர் 6 வது தெருவில் உள்ள ராமசாமி என்பவரது வீட்டின் 2-வது மாடிச் சுவரிலும் அவரது வீட்டுத் தரையிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் பதிந்து உள்ளதை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்தனர். "இப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை, ரப்பர் குண்டு மட்டுமே வீசினோம்" எனப் போலீஸார் கூறி வந்த  நிலையில், இப்பகுதியில் நடத்தப்பட்ட 7 மணி நேரக் கள ஆய்வில் 2 தோட்டாக்கள் பதிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 15,67,01,954 ரூபாய் மதிப்புள்ள அரசு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக ஏற்கெனவே மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா மீடியாக்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில்,தூத்துக்குடி  கலவரத்தில் பல்வேறு பகுதிகளில் உடைக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் சேதம் அடைந்த வாகனங்கள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தின் முன்பு வரிசையாக ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மூன்றாவது நாளாக ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!