வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (25/06/2018)

கடைசி தொடர்பு:18:45 (25/06/2018)

`என் நட்பைத் துண்டித்தார்'- ராணுவ அதிகாரியின் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற மேஜர் அதிர்ச்சி வாக்குமூலம்

டெல்லி ராணுவ அதிகாரியின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான மேஜர் நிகில் ஹாண்டா என்பவர் அளித்த வாக்குமூலம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராணுவ அதிகாரி

டெல்லியில் வசித்து வரும் இந்திய ராணுவ அதிகாரி அமித் திவிவேதியின் மனைவி சைலஜா. இவர் கடந்த சனிக்கிழமையன்று பிசியோதெரபி சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில், கன்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உள்ள சாலையில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், மீரட் நகரில் பதுங்கியிருந்த ராணுவ மேஜர் நிகில் ஹாண்டா என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

போலீஸிடம் நிகில் அளித்த வாக்குமூலத்தில், `அமித் திவிவேதி கடந்த 2015-ம் ஆண்டு நாகாலாந்தில் பணியாற்றினார். அப்போது, அவரது மனைவி சைலஜாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு, சில நாள்களிலேயே பணி மாறுதல் காரணமாக நாகாலாந்தை விட்டு வெளியேறி டெல்லியில் குடியேறினார். ஆனாலும், சைலஜாவுக்கும் எனக்கும் இடையிலான நட்பு நீடித்து வந்தது. செல்போனில் தொடர்ந்து பேசி வந்தோம். வீடியோ கால் மூலம் எங்களின் நட்பை வளர்த்து வந்தோம். எங்களது நெருக்கத்தை அறிந்த அமித் திவிவேதி, இருவரையும் எச்சரித்தார். அதன்பிறகு, சைலஜா என்னிடம் பேசுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். இருப்பினும், என்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். எனது கோரிக்கையை அவர் நிராகரித்தார். இதனை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரைக் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டேன்' எனக் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.